Thursday, 25 August 2011

*''சிலிக்கான் கிங்'' பதவி விலகல்

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து புதன்கிழமை விலகினார் 'சிலிக்கான் கிங்' என வர்ணிக்கப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ்.

உலகின் மிக சக்திவாய்ந்த நிறுவனமாக ஆப்பிளை மாற்றிய ஸ்டீவ் ஜாப்ஸ் பதவி விலகியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் கணையப் புற்றுநோய் காரணமாக அவர் இந்த கடினமான முடிவை மேற்கொண்டுள்ளதாக உள்வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரு அமெரிக்க தம்பதியின் வளர்ப்பு மகன் ஸ்டீவ் ஜாப்ஸ். புத்த மதத்தைச் சேர்ந்தவர். கல்லூரிப் படிப்பைக் கூட முழுமையாக முடிக்காத அவர், எழுபதுகளின் பிற்பகுதியில் தனது நண்பர் ஸ்டீவ் வோஸ்னியாக்குடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

இவரது நிறுவனம் தயாரித்த ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. ஆனால் ஆப்பிள் 2, கம்ப்யூட்டர் உலகில் இவரது நிறுவனத்துக்கான இடத்தை உறுதி செய்தது. 1980-ல் ஆப்பிளை பொது நிறுவனமாக மாற்றி பங்கு வெளியிட்டார். அது அவரை பெரும் கோடீஸ்வரர் ஆக்கியது.

1985-ல் தான் ஆரம்பித்த நிறுவனத்திலிருந்தே விலகிக் கொண்டார் ஸ்டீவ். எல்லா பங்குகளையும் விற்ற அவர், ஆப்பிள் பங்குகளை மட்டும் வைத்துக் கொண்டார். வெளியில் போய் நெக்ஸ்ட் என்ற கம்ப்யூட்டர் நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனம் பின்னர் ஆப்பிளுடன் இணைந்தபோது, ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிளுக்கு வந்தார், இடைக்கால தலைமை செயல் அலுவலராக.

பின்னர் 2000-ல் அவரே முழுமையான CEO என அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு ஸ்டீவ் ஜாப்ஸ் தொட்டதெல்லாம் தங்கம்தான். ஐபோன், ஐபேட், புதுப்புது மேக் கம்ப்யூட்டர்கள் என தொழில்நுட்பத் துறையில், எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது ஆப்பிள் நிறுவனம்.

பாரக் ஒபாமாவுடன் அமர்ந்து விருந்து சாப்பிடும் அளவுக்கு பெரும் விஐபியாகிவிட்டார் ஸ்டீவ்.

14 ஆண்டுகள் அவரது தலைமையில் ஆப்பிள் சாதித்தவை பிரமிக்கத்தக்க வெற்றிகள் என தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அடுத்து ஆப்பிள் புதிய ஐபோன், அடுத்த தலைமுறைக்கான அட்வான்ஸ்டு ஐ பேட் போன்றவற்றை அறிமுகப்படுத்தவிருக்கும் நிலையில் ஸ்டீவ் விலகியுள்ளார்.

"நான் ஒரு நாள் இந்த நிறுவனத்தில் இல்லாமலே போகலாம். அதற்கான நாள் வரும்போது, நிறுவனம் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்" என்பது ஸ்டீவ் ஜாப்ஸ் அடிக்கடி கூறும் வாசகம். அது இப்போது நிகழ்ந்தே விட்டது.

இப்போது ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத் தலைவராகவும், டிம் குக் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுவார்கள் என்றும், ஸ்டீவ் தொடர்ந்து நிறுவனத்துக்கு வழிகாட்டுவார்; முதலீட்டாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால், ஆப்பிளின் இந்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் அச்சத்தைப் போக்கியதாகத் தெரியவில்லை. நேற்று ஸ்டீவ் ஜாப்ஸ் தனது விலகலை அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் ஆப்பிள் நிறுவனப் பங்குகள் 7 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/08/blog-post_25.html"

Wednesday, 3 August 2011

* இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனா முதலிடம்


இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளில் சீனா முதலிடம் பெற்றுள்ளதாக நிதி திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்தமாக 1,385 மில்லியன் ஐ.அ.டொலர் பெறுமதியான புதிய கடன்களை இலங்கை பெற்றுள்ளது. இதில் சீனாவிடம் இருந்து மட்டும், 759.8 மில்லியன் ஐ.அ.டொலர் (மொத்த கடனில் 55%) பெறுமதியான கடன் பெற்றுக் கொண்டதாக நிதி திட்டமிடல் அமைச்சு வெளியிட்டள்ள நடு ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே காலத்தில் 413.4 மில்லியன் ஐ.அ.டொலரை வழங்கிய (30%) ஐப்பான் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இது தவிர உலக வங்கி ($.105.8m), ஆசிய அபிவிருத்தி வங்கி ($.89.2m), ஐ.நா. நிறுவனங்கள் ($.8.8m) மற்றும் சீனா, இந்தியா ஆகியவற்றில் இருந்து 1,385 மில்லியன் ஐ.அ.டொலர் பெறுமதியான புதிய கடன்களை இலங்கை பெற்றுள்ளது.

குறிப்பாக வீதி, துறைமுகம், மின்சாரம், நீர் வழங்கள் ஆகிய கீழ்கட்டுமான அபிவிருத்திகளுடன் விவசாயம், மீன் பிடி துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களிற்காகவே இந்த புதிய கடன்கள் பயன்படுத்தப்படுவதாகவும் நிதி திட்டமிடல் அமைச்சின் நடு ஆண்டு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான பிணக்கின் காரணமாக மேற்குலக நாடுகள் உதவிகளை குறைத்து வரும் நிலையில், சீனா. ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையின் பங்காளிகளாக மாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/08/blog-post.html"

Tuesday, 2 August 2011

* 30 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து 2013-க்குள் நீக்கும் HSBC


லாபம் பார்க்க போராடும் நாடுகளில் சுமார் 30 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்க சர்வதேச வங்கியான HSBC முடிவு செய்துள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் HSBC. வங்கியின் புதிய தலைவராக ஸ்டூவர்ட் கலிவர் பொறுப்பேற்றுள்ளார். இந்த வங்கியில் உலகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர். அதிலும் ஆசியாவில் தான் அதிகமானோர் பணி புரிகின்றனர்.

ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் வரிக்கு முந்தைய லாபம் 11.5 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த வங்கிப் பங்குகளின் விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வரிக்கு முந்தைய லாபம் 11.1 பில்லியனாக இருந்தது.

லத்தீன் அமெரிக்கா, அமெரி்க்கா, இஙகிலாந்து, பிரான்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வங்கியை மறுசீரமைக்கவுள்ளதால் 5 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்கியதாக வங்கி அறிவித்துள்ளது. வரும் 2013-ம் ஆண்டிற்குள் மேலும் 25, 000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது.

இது குறித்து வங்கியின் தலைவர் ஸ்டூவர்ட் கூறியதாவது,

பணி நீக்கம் தொடரும். தற்போதில் இருந்து வரும் 2013-ம் ஆண்டு இறுதிக்குள் சுமார் 25 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றார்.

மொத்தமுள்ள ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பணி நீக்கம் செய்யப்படவிருக்கின்றனர். ஆசியாவில் அதிக கவனம் செலுத்துவதற்காகத் தான் இந்தி ஆட்குறைப்பு என்று கூறப்படுகின்றது.

உலகெல்லாம் வங்கி அமைக்கும் திட்டத்தை HSBC கைவிட்டுள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/08/30-2013-hsbc.html"

Thursday, 28 July 2011

* சீனாவின் நவீன நிதி நெருக்கடி


கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக அதன் விரைவான பொருளார வளர்ச்சி விகிதங்களினால், சீனா 1930 களுக்குப் பின்னர் மோசமான உலகப் பொருளாதார நெருக்கடியைத் தவிர்த்துவிட்டது போல் தோன்றியது. ஆனால் இந்தச் சரிவைச் சமாளிப்பதற்கு பெய்ஜிங் பயன்படுத்திய வழிவகைகளான குறைந்த வட்டிவிகித கடன் மற்றும் பாரிய ஊக்கப் பொதிகள், திரும்ப செலுத்தமுடியாத கடன்களைத் தோற்றுவித்துள்ளன. அவை சீனாவிலும் சர்வதேச அளவிலும் புதிய நிதிய மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையை தோற்றுவிக்கக் கூடும் என்ற அச்சறுத்தலைக் கொடுத்துள்ளன.

கடன் இப்பொழுது உள்ளூர் அரசாங்கங்களை சூழ்ந்துள்ளது. இவை சொத்துக்கள் மற்றும் உள்கட்டுமானங்களில் முதலீடு செய்வதற்காக மிகப் பெரிய அளவில் கடன் வாங்கியுள்ளன. உள்ளூர் அரசாங்கங்கம் பற்றிய முதன்முதலான புள்ளிவிவரங்கள், NAO (National Audit Office) என்னும் தேசிய மேற்பார்வை அலுவலகத்தால் ஜூன் மாதம் வெளியிடப்பட்ட தகவல்கள், 10.7 ட்ரில்லியன் யுவான் அல்லது 1.65 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் என்னும் அதிர்ச்சிதரும் கடன்களை ஜூன் இறுதிவரை காட்டுகின்றன. இது நாட்டின் 2010 ம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தித் தொகையில் கிட்டத்தட்ட 27 சதவிகிதம் ஆகும்.

சர்வதேச தரப்படுத்தும் அமைப்பான மூடிஸ் (Moody’s), கடந்தவாரம் NAO கொடுத்துள்ள எண்ணிக்கையை விட $540 பில்லியன் அதிகமாகக் காட்டியுள்ளது. இதில் திரும்ப செலுத்தமுடியாத கடன்கள் மொத்தத்தில் 8 முதல் 12 சதவிகிதம் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர் அரசாங்கங்க கடனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்குத் திட்டம் இல்லாத நிலையில், சீன வங்கிகள் பற்றிய கடன் வழங்கும் தோற்றம் எதிர்மறையாக திரும்பும் சாத்தியம் பற்றி மூடிஸ் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவை அடித்தளமாகக் கொண்ட சீன உள்ளூராட்சிக் கடன் பற்றிய வல்லுனர் ஒருவரான விக்டன் ஷிஹ் கடன்கள் மொத்தம் 15.4 ல் இருந்து 20.1 டிரில்லியன் யுவானாகக் கூட இருக்கலாம், அதாவது சீனாவில் 2010 மொத்த உள்ளநாட்டு உற்பத்தியில் 40 முதல் 50% என என்று கூறுகிறார். நியூ யோர்க் டைம்ஸிடம் அவர் கூறியது: “கடன் வாங்கியிருக்கும் பெரும்பாலான அரசாங்கத் துறைகள் கடன்களுக்கான வட்டித்தொகைகைளைக் கூடக் கட்ட முடியாது.”

உள்ளூர் அரசாங்கங்களின் பாரிய செலவுகள் சொத்துக்கள் பற்றிய ஊகம் அதிகரிக்க உதவியுள்ளது. இதனால் சொத்துக்களின் விலைகள் பெரிதும் உயர்ந்துவிட்டதுடன், வீடுகள் இருப்பில் மிகப் பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் ஷாங்காய் வளர்ச்சி மையத்தில் சொத்துக்களின் விலை கிட்டத்தட்ட நான்கு மடங்கு பெருகிவிட்டது. இந்த ஆண்டு கொடுத்துள்ள அறிக்கை ஒன்றில், முதலீட்டு வங்கியான Credit Suisse, வுகானை சீனாவில் “தவிர்க்க வேண்டிய 10 உயர்மட்டத்திலுள்ள நகரங்களில் ஒன்றாக” அடையாளம் காட்டி, இப்பொழுதுள்ள இருப்பிலுள்ள வீடுகள்ளை விற்பதற்கே அதற்கு எட்டு ஆண்டுகள் ஆகும் என்று விளக்கியுள்ளது.

உள்ளூர் அரசாங்கங்க கடன் நெருக்கடி, 2008ம் ஆண்டு உலகளவில் வெடித்த நிதியக் கொந்தளிப்புக்கு பெய்ஜிங்கின் பிரதிபலிப்பின் நேரடி விளைவாகும். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானிற்கான சீனாவின் முக்கிய ஏற்றுமதிச் சந்தைதகளில் தீவிர சரிவு 23 மில்லியன் வேலைகள் விரைவாக இழக்கப்படுவதற்கு வழிவகுத்தது. சமூக அமைதியின்மை ஏற்படும் என்ற அச்சத்தில், சீன ஆட்சி 4 ட்ரில்லியன் யுவானுக்கு ஊக்கப் பொதித் திட்டம் ஒன்றை கோடிட்டு பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைக்க முயன்றது. அதே நேரத்தில் 1.2 ட்ரில்லியன் யுவான்களை மட்டுமே கொடுத்ததுடன் எஞ்சியதை உள்ளூர் அதிகாரங்களும் மற்றும் அரச நிறுவனங்களும் நிதியளிப்பதற்கு விட்டுவிட்டது.

இதன் விளைவு கடன் வாங்கும் களியாட்டம் போலாகிவிட்டது. நேரடியாக பத்திரங்கள் வெளியிடுவது தடை செய்யப்பட்ட நிலையில், உள்ளூர் அரசாங்கங்க அதிகாரிகள் முதலீட்டு நிறுவனங்களை நிறுவி அரசாங்கத்திற்குச் சொந்தமான வங்கிகளில் இருந்து கடன் வாங்கின. அவசியமாக தேவைப்படும் பொது மருத்துவ மனைகள், பள்ளிகளுக்கு நிதி செல்லவில்லை. மாறாக நிலச் சொத்துக்கள், உள்கட்டுமானத் திட்டங்கள் ஆகியவற்றிற்குச் சென்றது. இதை ஊக்குவிக்கும் வகையில் பெய்ஜிங் உள்ளூர் அரசாங்கங்க பொருளாதார வளர்ச்சிப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு கொடுத்தது.

உள்ளூர் அரசாங்கங்க கடன் புள்ளிவிவரங்கள் சீனப் பொது நிதியைப் பற்றிய விவரணத்தை தீவிரமாக மாற்றின. மத்திய அரசாங்கத்தின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20%க்கும் குறைவாக ஆயிற்று. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பொதுக்கடன் தரங்களை விட மிக மிகக் குறைவாகும். ஆனால் அமெரிக்க உயர் கல்வியாளர் Minxin Pei ,“சீனாவின் வெடிக்கவிருக்கும் கடன் குண்டு” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள சமீபத்திய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளபடி, உள்ளூராட்சிக் கடன் மற்ற கடன்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்போது சீனாவின் மொத்த கடன் நிலைமை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 70 முதல் 80% என உயர்ந்துவிடுகிறது.

கடனை இறுக்கிப்பிடிக்க பெய்ஜிங் நடவடிக்கை எடுத்துள்ளது. இது உள்ளூர் அரசாங்கங்கள் கடன்களை அடைப்பதையும் கடினமாக்கியுள்ளது. இவற்றில் பாதி அடுத்த இரண்டு ஆண்டுகளில் அடைக்கப்பட வேண்டியவை ஆகும். முதலீட்டு வங்கி UBS ன் சமீபத்திய அறிக்கை உள்ளூர் அரசாங்கங்க முதலீட்டுப் பெருநிறுவனங்கள் அடுத்த சில ஆண்டுகளில் $460 பில்லியன் அளவிற்கு கடன் செலுத்தமுடியாத நிலையைத் தோற்றுவிக்கும் என்று கணித்துள்ளார். மத்திய அரசாங்கம் உள்ளூராட்சி மற்றும் வங்கிகள், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை பிணை எடுக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டால் (ஏற்கனவே இது நடக்கிறது) சரிவு இன்னும் தீவிரம் அடையும்.

கடந்த காலத்தில் சீன உள்ளூர் அரசாங்கங்க நிதிகள் சர்வதேச நிதியச் செய்தி ஊடகத்தில் சிறு குறிப்பைக் கூட பெற்றிருக்காது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் உலக முதலாளித்துவம் தங்கியிருந்ததின் அடையாளமாக சீனாவில் கடன் அளவுகள் உலகப் பொருளாதாரத்தில் பெரும் கவலைகளையும் விளைவுகளையும் தூண்டிவிடுகின்றன.

கடந்த இரு தசாப்தங்களில் மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் சீனாவை உலகின் 10வது பெரிய பொருளாதரம் என்னும் தரத்தில் இருந்து 2ம் மிகப் பெரிய பொருளாதாரம் என்ற நிலைக்கு உயர்த்தின. Chinese Academy of Social Sciences ஏப்ரல் மாதம் கொடுத்த அறிக்கை ஒன்றின்படி, கடந்த ஆண்டு சீனா உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு 30%க்கும் மேலாக பங்களித்தது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா ஆகியவை தேக்கம் உற்ற நிலையில், சீனப் பொருளாதாரம் மெதுவாகச் செல்வது என்பது தற்போதுள்ள உலகப் பொருளாதார நெருக்கடிக்கு சுமையைத்தான் அதிகரிக்கும். ஆஸ்திரேலியா, பிரேசில் போன்ற பெரிய பொருள் உற்பத்தி நாடுகள் முதலில் பாதிக்கப்படும் நாடுகளாக இருக்கும்.

சீனாவிற்குள் உள்ளூராட்சி மற்றும் வங்கிகள் பற்றிய எத்தகைய பிணையெடுப்புச் செலவுகளும் தவிர்க்க முடியாமல், ஏதேனும் ஒரு வகையில், சாதாரண தொழிலாள வர்க்கத்தின்மீது சுமத்தப்படும்; இது சமூக அழுத்தங்களுக்கு எரியூட்டும். 1997-98 ஆசிய நிதிய நெருக்கடிக்குப் பின் பெய்ஜிங் தன் வங்கி முறையை நிலைநிறுத்த பெரிய அரசாங்க வங்கிகளில் இருந்து $335 பில்லியன் மோசமான கடன்களை எடுத்துக் கொள்ள நேரிட்டது. பிணை எடுப்புப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்கு ஆட்சி அரசாங்க நிறுவனங்களை தனியார்மயம் ஆக்கியது. இதனால் 20 மில்லியன் வேலைகள் அழிந்தன. அரசவீடுகள் கட்டும்முறை அகற்றப்பட்டது. சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளில் “கட்டணம் கட்டிப் பயன் பெறுக” திட்டம் தொடக்கப்பட்டது. இவை அனைத்தும் தொழிலாள வர்க்கத்தின்மீது சுமையை அதிகரித்தன.

சீனாவில் தற்போதைய கடன் நெருக்கடி இன்னும் பெரிய அளவில் உள்ளது. எந்தப் பொருளாதார மந்தநிலையும் விரைவில் வேலையின்மையை உயர்த்திவிடும். ஏற்கனவே விலை உயர்வுகள் பற்றிக் கணிசமான சமூக அதிருப்தி உள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடு ஒவ்வொரு ஆண்டும் என்ற கணக்கில் 6.4 சதவிகிதம் அதிகரித்துவிட்டது. இது மூன்று ஆண்டுகளில் மிக அதிகமான சதவிகிதம் ஆகும். உணவு விலை 14 சதவிகிதம் அதிகரித்தது. பன்றி இறைச்சியின் விலை 57% உயர்ந்தது. இன்னும் கூடுதலான பொருளாதரச் சுமைகள் ஆட்சி இப்பொழுது 400 மில்லியன் என்ற வலுவான எண்ணிக்கையை கொண்டுள்ள தொழிலாள வர்க்கத்திடம் இருந்து எதிர்ப்பு மற்றும் தடுப்புக்கள் என்றவகையில் எழுச்சிகள் பற்றி எப்பொழுதும் அஞ்சும் நிலையைத் தூண்டும் சாத்தியப்பாட்டை கொண்டுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளாக சீனாவில் தொடர்ந்த வலுவான வளர்ச்சி சில வர்ணனையாளர்களை சீனா ஒரு முற்றிலும் புதிய பொருளாதார வளர்ச்சி முன்மாதிரியை அளிக்கிறது என்ற ஊகத்தை கொடுக்க வகை செய்தது. உண்மையில் சீனா இப்பொழுது சர்வதேசப் பொருளாதார நெருக்கடியை தோற்றுவித்த அதே உலக முதலாளித்துவ முரண்பாடுகளில் கட்டுண்டு இருக்கிறது. உலக முதலாளித்துவத்தின் வலிமைக்கான ஒரு புதிய மூலாதாரம் என்பதற்கு முற்றிலும் எதிரிடையாக சீனா களிமண்ணாலான கால்களைக் கொண்ட ஒரு பெரிய பொருளாதாரமாக காட்சியளிக்கின்றது.

submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/07/blog-post_28.html"

Saturday, 23 July 2011

* இலங்கை பொருளாதாரத்தின் நம்பிக்கை உயர்வு

புகழ் பெற்ற சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்கள் இரண்டினால் (Moody’s Investors Service Singapore (Pvt) Ltd and Fitch Ratings), இலங்கை பொருளாதாரம் தொடர்பான நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் அடைவு மட்டமானது, 'BB-' என்பதில் இருந்து 'B+' ஆக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தரப்படுத்தல் நிறுவனங்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கையில் தற்போது முதலீடு தொடர்பான அச்சுறுத்தல் குறைவாக காணப்படுகின்றது. அத்துடன் பொருளாதார வளர்ச்சி வீதம், பணவீக்க வீதம், வரவு செலவு திட்டப் பற்றாக்குறை மற்றும் பொதுப் படுகடன் தொடர்பாக திருப்தியளிக்க கூடிய நிலையினை கண்டுள்ளதால் இலங்கைப் பொருளாதாரத்தின் நம்பிக்கை ஒரு படி மேலே உயர்ந்துள்ளது.

2009 ல் 9.9 சதவீதம் (in GDP) எனக் காணப்பட்ட இலங்கையின் வரவு செலவு திட்டப் பற்றாக்குறையினை, 2010 ல் 8 சதவீதமாக குறைக்க முடிந்துள்ளது. இதனை 2011 ல், 6.8 சதவீதமாகவும் 2012 ல், 5.2 சதவீதமாகவும் மேலும் குறைப்பதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதேபோல 2009 ல், இரட்டை தசமதானங்களில் காணப்பட்ட பணவீக்க வீதத்தினை கடந்த ஆண்டில் இருந்து ஒற்றை தசமதானமாகவே வைத்திருக்க இலங்கைப் பொருளாதாரத்தினால் முடிந்துள்ளது.

2011 மற்றும் 2012 காலத்தில், 7.5 - 8 சதவீத பொருளாதார வளர்ச்சியினை பதிவு செய்ய கூடிய வல்லமையினை இலங்கை தற்போது கொண்டுள்ளது. 2009 மார்சில் 1.3 பில்லியன் ஐ.அ.டொலராக காணப்பட்ட இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கினை, 2011 ஏப்ரல் மாதத்தில் 7.2 பில்லியன் ஐ.அ.டொலராக அதிகரிக்க முடிந்துள்ளது.

இதேபோல அரசியல் உறுதி என்ற ஆய்விலும் ஸ்திரம் என்ற அளவில் இருந்து சாதகம் என்ற அளவுக்கு முன்னேறியுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு இலங்கைப் பொருளாதாரத்தின் நாணயம் அல்லது கடன் மீளளிக்கும் ஆற்றல் 'BB-' என்பதில் இருந்து 'B+' ஆக உயர்ந்துள்ளது என சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை தற்போது காணப்படும் பொருளாதார குறிகாட்டிகளின் அடிப்படையில், இலங்கையில் உயர் பொருளாதார வளர்ச்சி (8% - 10%) இப்போதைக்கு சாத்தியம் இல்லை என உலக வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் (Global Economic Prospects 2011) சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/07/blog-post.html"

Thursday, 16 June 2011

* இலங்கையில் உயர் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் இல்லை - உலக வங்கி


நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக (GDP) இலங்கை அரசு எதிர்பார்த்திருந்த உயர் பொருளாதார வளர்ச்சி வீதத்தினை அடைவது சாத்தியம் இல்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை கடந்த ஆண்டில் எட்டு சதவீத பொருளாதார வளர்ச்சியினை கண்டது. இதனை 2011, 2016 ல் முறையே 8.5%, 9.5% மாக அதிகரித்து, சராசரியாக எட்டு சதவீதத்திற்கும் மேலான வளர்ச்சி வீதத்தினை பதிவு செய்ய இலங்கை அரசு எதிர்பார்த்திருந்தது.

எனினும் இது 2011, 2012, 2013 ல் முறையே 7.5%, 6.8%, 6.4% என எட்டு சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியினையே இலங்கையால் பதிவு செய்ய முடியும் என உலகவங்கி கடந்த வாரம் வெளியிட்ட (Global Economic Prospects 2011) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக உயர்வான பணவீக்கம், உயர்வான வரவு செலவு திட்டப் பற்றாக்குறை மற்றும் உயர்ந்தளவான பொதுப் படுகடன்கள் போன்றவை தனியார் முதலீடுகளை வெளியேற்றுகின்றன. இதனால் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலான வளர்ச்சி வீதம் சரிவடையும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் பணவீக்கம் உயர்வாக உள்ளன. ஆனால் இவை வட்டி வீதங்களை உயர்த்தி பணவீக்க அழுத்தங்களை சமாளிக்கின்றன. எனினும் இத்தகைய தீர்மானத்தினை இலங்கை இதுவரை மேற்கொள்ளவில்லை. இதனால் தொடர்ந்தும் இலங்கைப் பொருளாதாரம் பணவீக்க அழுத்தங்களிற்குள்ளேயே காணப்படுகின்றது.

இதன் விளைவாகவும் வரவு செலவுதிட்ட பற்றாக் குறைகள் உயர்வடைவதுடன் இதுவே கடந்த ஆண்டில் மாலைதீவு, இந்தியா, இலங்கை ஆகியவற்றில் முறையே 20.7%, 8.8%, 7.9% என ஒப்பீட்டளவில் இலங்கையில் குறைவாக காணப்பட்டாலும் வருந்தத்தக்க நிலையிலேயே இலங்கையும் உள்ளது என உலக வங்கி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை அமெரிக்காவினை தளமாக கொண்டியங்கும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நோக்கம், செயற்பாடு மற்றும் அறிக்கைகள் தொடர்பாக ஆசிய நாடுகள் அதிருப்தி அடைந்து இருப்பதோடு இவற்றுக்கு எதிராக பல விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/06/blog-post.html"

Tuesday, 15 March 2011

* ரூ.121.3 பில்லியன் வருமானத்தை EPF ஈட்டித் தந்துள்ளது

கடந்த ஆண்டில் ரூ.121.3 பில்லியன் வருமானத்தை ஊழியர் சேமலாப நிதியம் ஈட்டித் தந்துள்ளது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.6% வளர்ச்சி என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மொத்தமாக ரூ.900 பில்லியனை கடந்த ஆண்டில் ஊழியர் சேமலாப நிதியம் கொண்டிருந்தது. இதில் 94% க்கும் மேலான அளவு நிதியினை அரச பிணைகளில் முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலமாக கடந்த ஆண்டில் வட்டியாகவும் இலாபமாகவும் ரூ.118 பில்லியன் வருமானத்தைப் பெற முடிந்துள்ளது.

இதேவேளை ரூ.32 பில்லியன் நிதியினை பங்கு வானிபத்திலும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எனினும் இதன் தொகை அதிகமாக உள்ளதாக பொருளியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக பொருளியல் துறை விரிவுரையாளர் Dr.எஸ்.சந்திரசேகரம் ஒன்லைன் உதயனுக்கு கருத்து தெரிவிக்கையில், பங்கு சந்தையில் இவ்வாறு அரசு முதலீடு செய்வதனை இரண்டு விதமாக நோக்கலாம்.

அரச நிதி வளத்தினை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் மேலதிக வருமானத்தையும் பங்குச் சந்தையிலான வளர்ச்சியினையும் அடைய முடியும். எனினும் அரசின் பங்குச் சந்தையிலான பாரிய முதலீடானது பங்கு வானிபத்தில் ஒர் போலியான வளர்ச்சியை தோற்றுவிக்கின்றது. இதனை நம்பி முதலீடு செய்யும் தனியார் துறையினர் இலாபத்தை மட்டுமன்றி ஆபத்தினையும் சந்திக்க நேரிடுகின்றது.

குறிப்பாக பங்கு வானிபம் சிறப்பாக உள்ள காலத்தில் அரசு தான் வைத்திருக்கும் பங்குகளை விற்று வருமானத்தை உயர்த்த முனையும் போது இந்த அதிர்ச்சியினை தனியார் துறையால் ஈடு செய்ய முடியாத நிலையில் பங்குதாரர்கள் நஷ்ரம் அடைகின்றனர் எனத் தெரிவித்தார்.

இதேவேளை தற்போது வைப்புகளிற்கான வட்டி வீதங்கள் மிகக் குறைவாக உள்ள நிலையில் ஊழியர் சேமலாப நிதியத்தில் உள்ள வைப்புக்களிற்கு 12.5% வட்டி வழங்கப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/03/1213-epf.html"

Monday, 14 February 2011

* மின் உற்பத்தியில் வடபகுதியும் முன்னேற்றம்

2012 முடிவதற்குள் இலங்கை முழுவதும் மின் ஒளி பெறவேண்டும் என மகிந்த சிந்தணை எதிர்பார்க்கின்றது. இதற்கமைய மின்சார உற்பத்தியில் வடபகுதியும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றத்தை கண்டிருப்பதாக அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு இறுதி நிலவரப்படி மின் வழங்களில் கிளிநொச்சி 10%, முல்லைத்தீவு 16%, மன்னார் 44%, வவுணியா 68%, யாழ்ப்பாணம் 72% என்றளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் 100% மின் வழங்களை பெற்ற மாவட்டங்களாக கொழும்பு, கம்பகா, அம்பாந்தோட்டை ஆகிய
மாவட்டங்கள் காணப்படுகின்றன. அத்துடன் 90% க்கு மேலான அளவில் மின் வழங்களை பெற்ற பிரதேசங்களாக களுத்துறை, மாத்தறை, காளி, கண்டி ஆகிய மாவட்டங்கள் காணப்படுகின்றன என அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தினால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_14.html"

Friday, 11 February 2011

* எலக்ட்ரானிக் பிக் பாக்கெட் (Electronic Pick Pocket)

கிரெடிட் கார்டுகளை வைத்துக்கொண்டு பெருமையுடன் ஸ்விப் பண்ணும் ஆசாமிகள் இனி தலையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டும்.

அந்த எளிய முறைக்கும் ஆப்பு தயாராகி விட்டது. உங்களின் கிரெடிட் கார்டுகளை கண்களால் காணாமல், கைகளால் கூட எடுக்காமல் அதனை அப்படியே ஸ்கேன் செய்து காப்பி அடிக்கும் நவீன சாதனங்களும் வந்துவிட்டன.

கிரெடிட் கார்டு என்றில்லாமல்,பாஸ்போர்ட் போன்ற அதி முக்கியமான தகவல்களையும் இம்முறையில் எளிதாக திருடலாம்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/electronic-pick-pocket.html"

Thursday, 10 February 2011

* வேலைதேடி வெளிநாடு செல்வோர் வயதெல்லை அதிகரிப்பு

வேலைதேடி வெளிநாடு செல்லும் இலங்கையரின் வயதெல்லை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாடு செல்லும் இளம் பெண் தொழிலாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இவ்வயதெல்லை அதிரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


வேலைக்காக வெளிநாடு செல்லும் இலங்கையரில் 50 வீதமானவர்கள் பெண்கள். அத்துடன் 2010 யூன் வரை 134,670 பேர் வேலைக்காக வெளிநாடு சென்றனர். இவர்களில் 59,377 பேர் பெண்கள் என லங்கா பிஸ்னஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

பெண்களை வேலைக்கெடுக்கும் பெரும்பாலான வெளிநாடுகள் இவர்களிற்கான குறைந்த வயதெல்லை கட்டுப்பாட்டை கொண்டிருக்கவில்லை. அதேவேளை வெளிநாடு செல்லும் இலங்கையருக்கு இழைக்கப்படும் பல்வேறு வகையான சுறண்டல்களில் இளம் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என லங்கா பிஸ்னஸ் இணையத்தளம் தெரிவிக்கின்றது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_10.html"

Wednesday, 9 February 2011

* எரிபொருள் விலை அதிரிக்க வேண்டும்: லங்கா ஐ.ஓ.சி அரசிடம் கோரிக்கை

ஒரு லீற்ரர் பெற்ரோலின் விலை 9 ரூபாவாலும், ஒரு லீற்ரர் டீசலின் விலை 21 ரூபாவாலும் அதிகரிக்க அரசிடம் கோரியுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி யின் இயக்குனர் சுரேஸ் குமார் தெரிவித்துள்ளதாக லங்கா பிஸ்னஸ் இனையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் எரிபொருட்களிற்கான விலை அதிகரித்துள்ளது.இதற்கமைய லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் விலையதிரிப்பினை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசு ஒரு லீற்ரர் பெற்ரோலுக்கான தீர்வையினை 10 ரூபாவால் குறைக்க திட்டமிட்டுள்ளதாக இன்று ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன.

இதுவரை ஒரு லீற்ரர் பெற்ரோலிற்கு 15 ரூபா தீர்வை விதிக்கப்பட்டு வந்ததுடன் தற்போது 5 ரூபாவாக தீர்வை அமைவதால் பெற்ரோல் விலையில் மாற்றம் ஏற்படாது எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது ஒரு லீற்ரர் பெற்ரோல் 115 ரூபாவிற்கு விற்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_09.html"

Tuesday, 8 February 2011

* இலங்கையின் ஏற்றுமதி வருமானங்கள் அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 2010 நவம்பரில் 834 மில்லியன் ஐ.அ.டொலரால் அதிகரித்துள்ளது. இது 2009 நவம்பருடன் ஒப்பிடுகையில் 36 வீத வளர்ச்சி என்பதுடன் 2004 ஒக்டோபருக்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட ஆகக் கூடிய தொகை என மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது.


ஏற்றுமதி வருமானத்தில் கைத்தொழில் ஏற்றுமதிகள் (76வீதம்) பிரதான இடத்தினை வகிக்கின்றது. இதற்கு புடவை மற்றும் ஆடை ஏற்றுமதி அதிகரிப்பால் ஏற்பட்டுள்ளதாகும். இதேவேளை 2010ன் முதல் 11 மாதங்களில் மொத்தமாக ஏற்றுமதி வருமானம் 7,339 மில்லியன் ஐ.அ.டொலராக காணப்படுவதுடன், இது 2009ம் ஆண்டை விட 15.4 வீதம் அதிகமாகும்.

எனினும் 2009 உடன் ஒப்பிடுகையில் 32.6 வீதம் இறக்குமதிச் செலவுகள் அதிகரித்துள்ளது. அதாவது 2010ன் முதல் 11 மாதங்களில் இறக்குமதிச் செலவுகளின் அளவு 12,083 மில்லியன் ஐ.அ.டொலர் என பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_5234.html"

* பிரித்தானியாவில் தங்கத்தின் விலை உயர்வு

பொருளாதார நிச்சயமற்ற நிலைமைகள் காரணமாக பிரித்தானியாவில் தங்கத்தின் விலை கடந்த மாதம் ஒரு அவுன்ஸ் 882 ஸ்டெர்லிங் பவுணாக அதிகரித்திருந்தது. இது 2007ல் இருந்த விலையிலும் பார்க்க இரு மடங்கு அதிகமானதாகும்.

இதேவேளை தங்கம் மீதான முதலீடு ஒரு காலத்தில் ஆபத்தானாதாக கருதப்பட்டது. ஆனால் இன்று தங்கத்தின் மீதான முதலீடு எப்போதுமே சிறந்த ஒரு முதலீடு என்று கருதப்படுகின்றது. தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற நிலையில், புதிதாக தங்கம் விளையும் இடங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதும் அவசியமாகின்றது.

பிரிட்டனுக்குச் சொந்தமான வட அயர்லாந்திலுள்ள தொழில்படு நிலையில் இருந்த ஒரேயொரு தங்கச் சுரங்கத்தை 2007ல் கனேடிய நிறுவனமான கலண்டாஸ் பொறுப்பேற்றது. "ஒமாக்" என்பதே இந்தத் தங்கச் சுரங்கத்தின் பெயராகும். இந்த தங்கச் சுரங்கம் 1998ல் ஐ.ஆர்.ஏ கொரில்லாக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி 29 பேர் பலியானார்கள்.

எனினும் இச்சுரங்கத்தில் பிரிட்டிஷ் மகாராணி உட்பட பலர் முதலீடு செய்துள்ளனர். தங்கத்துக்கான உலகச் சந்தை நம்பிக்கையூட்டுவதாக உள்ளதென்றும் அந்த நிறுவனத்தின் தலைவர் கூறுகின்றார்.

பிரிட்டனில் ஒரு அவுன்ஸ் தங்கம் 158 ஸ்டெர்லிங் பவுணுக்கு ஒரு காலத்தில் விற்கப்பட்டது. தற்போது அதன் விலை 800 ஸ்டெர்லிங் பவுணுக்கும் அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

என் ஆக்கம் உதயன் இணையத்தில்


submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_08.html"

Saturday, 5 February 2011

* இலங்கையின் பணவீக்கம் இவ்வாண்டு உயரும்

இலங்கையின் பொருளாதாரம் இவ்வாண்டில் 7 வீதத்தால் வளர்ச்சியடையும். எனினும் பணவீக்கம் 8 வீதமாக உயரும் என சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) உத்தியோகபூர்வ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு துறை, அன்னியச் செலாவணி ஒதுக்கு மற்றும் நாணயமாற்று வீதம் நிலையான தன்மையைப் பெற்று வருகின்றது. இப்போதுதான் இலங்கை சரியான பாதையில் பயணிக்கிறது என ஐ.எம்.எவ் ன் இலங்கைக்கான தூதுவர் கொசி மாதே தெரிவித்துள்ளார்.

கடனளிப்புக்காக இலங்கைப் பொருளாதாரம் 5வது தடவையாக ஐ.எம்.எப் ஆல் மீளாய்வு செய்யப்பட்டது. இதன் முடிவுகளை சமர்பித்து பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கையின் பொருளாதார போக்கு திருப்தியளிப்பதாக உள்ளது. எனினும் இவ்வாண்டில் பணவீக்கம் அதிகரிக்கும். இதற்கு சர்வதேச உணவு விலையேற்றம், உள்நாட்டு வெள்ள அழிவுகள் பணவீக்க உயர்வை ஊக்குவிக்கும். எனினும் வெளிநாட்டு பாதிப்புக்கள் மற்றும் உள்நாட்டு மெய்சொத்து சந்தை தொடர்பாக மத்திய வங்கி சிறப்பான கண்கானிப்பினை மேற்கொண்டு வருகிறது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரச வருமானம் மிகக் குறைவாக உள்ளது. அத்துடன் வரி மற்றும் முதலீட்டு சீர் திருத்தங்கள் சிறப்பாக உள்ளன. நிதித் துறையும் இப்போது வளர்ச்சிக்கு உதவக் கூடிய நிலையினை அடைந்துள்ளது. இன்னும் 4 - 5 வருடங்களில் தற்போதுள்ள 80% எனும் வரவுசெலவு பற்றாக்குறை நிலையை 60% மாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் பேரினப் பொருளாதாரம் சிறப்பாக நகருகின்றது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை கடந்தாண்டு 6.5% பணவீக்கம் அமையும் என ஐ.எம்.எப் எதிர்வு கூறியது. ஆனால் 5.9% என குறைவாக பதிவு செய்தது. அத்துடன் ஐ.எம்.எப்பின் நோக்கம் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக பல விமர்சனங்கள் இருப்பதாக பொருளியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

நன்றி:-உதயன் இணையம்

submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_05.html"

Tuesday, 1 February 2011

* இலங்கையில் புதிதாக ஐயாயிரம் ரூபா பெறுமதியிலும் பணநோட்டு


எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு புழக்கத்தில் இருக்கும் நாணயத்தாள்களுடன் ஐயாயிரம் ரூபா நாணயத் தாளொன்றையும் அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தீர்மானத்தின் பிரகாரம் தற்போதைக்கு புழக்கத்தில் இருக்கும் 20,50,100,500, 1000,5000 ரூபா பெறுமதியான நாணயத்தாள்களுக்கும் புதிதாக நாணயத்தாள்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

அதனுடன் இணைந்ததாக இலங்கையில் இதுவரை புழக்கத்தில் இல்லாத ஐயாயிரம் பெறுமதியான ரூபா நோட்டும் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ரூபா நோட்டுகள் எதிர்வரும் சுதந்திர தினத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.

இலங்கையின் அபிவிருத்தி, சுபீட்சம், கலைகள், பறவைகள் என்பன புதிய ரூபா நோட்டுகளில் இடம்பெற்றுள்ளன.

நன்றி:- தமிழ்வின்

submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post.html"

Wednesday, 26 January 2011

* டயலொக் தொலைக்காட்சியில் சேவையில் இணையும் 3 தமிழ் அலைவரிசைகள்

தமிழ்பேசும் மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை கருத்திற்கொண்டு டயலொக் அக்சிஆட்டா நிறுவனம் தனது டயலொக் தொலைக்காட்சி அலைவரிசைகளின் தொகுப்பில் சன் தொலைக்காட்சி சேவையின் தமிழ் அலைவரிசைகளை புதிய இணைத்துள்ளது.

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி அலைவரிசைகளான சன் டி.வி., சன் மியுசிக் மற்றும் கே.டி.வி. ஆகிய அலைவரிகைளே டயலொக் தொலைக்காட்சியின் அலைவரிசைப் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

டயலொக் டி.வி.யின் அதிகூடிய கட்டணப் பொதியை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இத்தமிழ் அலைவரிசைகளும் இலவசமாக வழங்கப்படும். அதேநேரம், பிரத்தியேகமாக தமிழ் அலைவரிசைகளுக்கென தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தீ என்ற பொதியை தெரிவு செய்வதன் மூலம், புதிய அலைவரிசைகள் உட்பட டயலொக் டி.வி.யிலுள்ள அனைத்து தமிழ் அலைவரிசைகளையும் பார்த்து மகிழ முடியும் என்று டயலொக் குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரியும் டயலொக் தொலைக்காட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நுஷாட் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நுஷாட் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

தொலைக்காட்சி என்பது மக்களுக்கு பல்சுவை அம்சங்களை வழங்குவது. எனவேதான் செய்திகள், திரைப்படங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, களிப்பூட்டல் என பல்வேறு வகையான அலைவரிசைகளை எமது பக்கேஜில் இணைத்துக் கொண்டுள்ளோம்.

டயலொக் டி.வி.யின் செயற்பாடுகளை நாம் ஆரம்பித்தபோது அது 28 அலைவரிசைகளைக் கொண்டிருந்தது. இப்போது அலைவரிசைகளின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் 15 ஆயிரம் பாவனையாளர்களைக் கொண்டிருந்த டயலொக் டி.வி. இன்று 1இலட்சத்து 50ஆயிரம் பாவனையாளர்களை தம்வசப்படுத்தியுள்ளது.

தமிழ் பேசும் சமுகங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வகைகளிலும் வெளிநாட்டு தமிழ் அலைவரிசைகளை பார்க்கின்றனர். பொதுவாக தென்னிந்திய தொலைக்காட்சி அலைவரிசைகள் இலங்கையிலுள்ள தமிழ்,முஸ்லிம் நேயர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சொந்தமான அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வீட்டிலும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன என்பதை எமது சந்தை ஆய்வுகளிலிருந்து தெரிந்து கொண்டோம். அதனடிப்படையிலேயே சன் குழுமத்துடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டோம்.

ஏற்கனவே டயலொக் தொலைக்காட்சியின் 1949 ரூபா என்ற கட்டணப் பொதியை பாவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மூன்று அலைவரிசைகளும் இலவசமாக வழங்கப்படும். வேறொரு பக்கேஜை பாவிக்கின்ற வாடிக்கையாளர் 729 ரூபாவை மேலதிமாக செலுத்தி இம்மூன்று அலைவரிசைகளையும் இணைத்துக் கொள்ள முடியும்.

இது தவிர தற்போது தீ என்ற புதிய பக்கேஜ் ஒன்றினை அறிமுகப்படுத்துகின்றோம். அதனை தெரிவு செய்வதன் மூலம் மேற்குறிப்பிட்ட 3 புதிய அலைவரிசைகளையும் ஏற்கனவே உள்ள கலைஞர், தொலைக்காட்சி, ஸ்டார் விஜய் போன்றவற்றையும் அத்துடன் உள்நாட்டு அலைவரிசைகளையும் பார்த்து மகிழலாம். இந்த பக்கேஜிற்கான கட்டணம் 729 ரூபாவாகும்.

செய்மதித் தொலைக்காட்சி ஒளிபரப்பில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை டயலொக் டி.வி, கொண்டுள்ளது. நாட்டின் எந்தவொரு மூலையில் இருக்கின்ற எவரும் இந்த சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

சன் டி.வி.யுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு இப்போது சிறந்த அலைவரிசைத் தெரிவுகளை வழங்கியுள்ளோம். வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்து அதன்படி எதிர்காலத்திலும் புதியபுதிய அலைவரிசைகளை இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றார்.

முன்னர் சீ.பி.என். இஸட் நிறுவனத்திற்கு சொந்தமாகவிருந்த சொத்துக்களை கையகப்படுத்தியதன் டயலொக் குழுமம், செய்மதியூடான தொலைக்காட்சி சேவைத்துறைக்குள் காலடி எடுத்துவைத்தது. இதன் மூலம் இலங்கையின் செய்மதித் தொøல்ககாட்சி சேவைத்துறையில் புரட்சியொன்றை ஏற்படுத்திய டயலொக் டி.வி.யை இப்போது நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் தனது சேவையை விஸ்தரித்துள்ளது.

நன்றி:- வீரகேசரி இணையம்
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/01/3.html"

Sunday, 23 January 2011

* 5 பில்லியன் அமெ. டொலர்களை இலக்கு வைக்கும் இலங்கையின் ஆடைக் கைத்தொழில்துறை

இலங்கையின் ஆடைக் கைத்தொழில் துறையின் மூலம் 2015 ஆம் ஆண்டளவில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டும் நோக்கில் புதிய துறைசார் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆடைக் கைத்தொழில் துறை தி;ட்டமிட்டுள்ளது.

"இலங்கையின் ஆடைக் கைத்தொழில் உலகத் தரம்மிக்கதான தயாரிப்புகளை சர்வதேச முத்திரையுடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இது எப்பொழுதும் தொழில்சார் விழுமிய நடைமுறைகளையும் சுற்றாடல் தராதரங்களையும் கடைப்பிடித்து வருகின்றது. இக் கைத்தொழிலானது 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டித்தருமளவு பெரியதொரு கைத்தொழிலாகும். இதற்கு மேலதிக வசதிகளை வழங்குவதற்காக உட்துறைமுக வர்த்தக ஈடுபாட்டு இறக்குமதிகள், பதனிடல் மற்றும் மீள் ஏற்றுமதிகள், கப்பலேற்றல் வியாபாரங்கள் என்பவற்றினை ஆடைக்கைத்தொழில் ஊக்குவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். உயர் பெறுமதி சேர்க்கப்பட்ட செயற்பாடுகளுடன் தொடர்பான புடவை, ஆடை மற்றும் தோற்பொருள் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கு ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், புடவை, தோற்பொருள், பாதணிகள் மற்றும் பைகள் தயாரிப்புக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் இறக்குமதி தீர்வை மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.

முகாமைத்துவம், நிதி, வழங்கல் மற்றும் விலைப்பட்டியலிடல் செயற்பாடுகளுக்கான பிரதான கொள்வனவாளர்கள் தமது தலைமையகங்களை இலங்கையில் தாபிப்பதை கவர்வதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அத்தகைய செயற்பாடுகளின் வெளிநாட்டுச் செலவாணி வருமானத்தினை வருமான வரியிலிருந்து விலக்களிப்பதற்கு நான் முன்மொழிகிறேன். இச்செயன்முறைகளை ஊக்குவிக்கும் வகையில் செலாவணிக் கட்டுப்பாட்டுத் தேவைப்பாடுகள் மற்றும் சுங்க நடைமுறைகள் என்பன இலகுவாக்கப்படும்." என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் தெரிவித்திருந்தார்.

மேலும், மஹிந்த சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி கொள்கைவரைவுத்திட்டத்துக்கு அமைவாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் தேசிய திட்டமிடல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் "இலங்கை, ஆசியாவின் சொர்க்கபுரி" திட்டமும் ஆடைக் கைத்தொழில் துறை முன்னேற்றத்துக்கு வழிகோலியுள்ளது.

2009 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த தேசிய ஏற்றுமதி வருமானத்தில் 46 வீதமான 3262 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஆடைக் கைத்தொழில் துறையின் மூலம் பெற்றுக் கொள்ள முடிந்ததாக தேசிய கொள்கை வரைவுத்திட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் பெருமளவு பங்கை வகிப்பது ஆடைக் கைத்தொழில் துறை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், உள்நாட்டு ஆடைக்கைத்தொழில் முயற்சியாளர்கள் புதிய தயாரிப்புகளை வடிவமைப்பதன் மூலம் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டிகரமான சூழ்நிலையை சமாளிக்க முடியுமென தேசிய கொள்கை வரைவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஆடை ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் மேலும் மூன்று புதிய ஆடைக் கைத்தொழில் பிராந்தியங்கள் உருவாக்கப்படும். புதிய தயாரிப்புகளை வடிவமைத்தல் மற்றும் புதிய உற்பத்திப் பொருகள் மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிப்பில் கூடிய அக்கறை செலுத்தப்படும்" என தேசிய கொள்கை வரைவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துறையானது உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையில் முக்கிய ஆடை தயாரிப்பாளராக தடம் பதித்துள்ளது.

ஜாஃப் (JAAF) அமைப்பின் பேச்சாளர் கருத்து தெரிவிக்கையில், பாரம்பரிய வர்த்தக நடவடிக்கைகளை கைக்கொள்வதிலும், ஆடைக் கைத்தொழில் துறையில் முன்னணி ஈடுபாடுடையவர்கள் எனும் வயிலும், உலகின் முதற்தர சூழல் பாதுகாப்பான தொழிற்சாலைகளையும் கொண்டமைந்தமை போன்றன இந்த துறையின் வளர்ச்சியில் நாம் எந்தளவு அக்கறை கொண்டுள்ளோம் என்பதற்கு சான்று பகர்கின்றன" என்றார் இலங்கையின் ஆடைக் கைத்தொழில்துறையானது சர்வதேச கொள்வனவாளர்களுக்கு பிரதான மூன்று அனுகூலங்களை வழங்குகிறது. முதலாவதாக, அதிவேகமான விநியோகம் அமைந்துள்ளது. இதற்கு; உலகில் இலங்கையின் அமைவிடம் காரணமாக அமைந்துள்ளது. உற்பத்தியிலிருந்து விநியோகம் வரை இலங்கை ஆடைக் கைத்தொழில்துறையானது நேரத்தை குறைப்பதற்கான அணுகுமுறைகளை கையாண்டு வருகிறது.

இரண்டாவது அனுகூலமாக, கேள்விக்கு ஏற்ப பாரிய கொள்ளளவுகளில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்வனவாளர்களுக்கு வழங்கக்கூடிய திறன் காணப்படுகிறது. கடந்த நான்கு தசாப்த காலமாக உலகத்தரம்மிக்க தயாரிப்புகளை கொள்வனவாளர்களுக்கு இலங்கை ஆடைக் கைத்தொழில் துறை வழங்கி வருகிறது.

மூன்றாவது அனுகூலமாக, இலங்கையில் காணப்படும் சாதகமான வர்த்தக கொள்கைகளும் முதலீட்டாளர் சூழ்நிலையுமாகும். தெற்காசியாவில் மிகவும் கட்டுப்பாடுகள் குறைந்த பொருளாதார நிலை காணப்படும் நாடாக இலங்கை கணிப்பிடப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் மற்றும் முதலீட்டு உறுதிப்படுத்தல் உடன்படிக்கைகள் போன்றன வெளிநாட்டு முதலீட்டாளர்களை பெருமளவில் கவரும் வகையில் அமைந்துள்ளன என ஜாஃப் (JAAF) அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஆடைக் கைத்தொழில் துறையின் முன்னேற்றம் குறித்து இவ்வாண்டு முதல் முன்னெடுக்கப்படவுள்ள விழிப்புணர்வு நடவடிக்கைகளின் மூலம் 2015 ஆம் ஆண்டளவில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஏற்றுமதி வருமானமாக பெற்றுக் கொள்ள முடியுமென தாம் எதிர்பார்ப்பதாக ஜாஃப் (JAAF) அமைப்பு எதிர்வு கூறியுள்ளது.

நன்றி:- வீரகேசரி இணையம்
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/01/5.html"