Thursday, 28 July 2011

* சீனாவின் நவீன நிதி நெருக்கடி


கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக அதன் விரைவான பொருளார வளர்ச்சி விகிதங்களினால், சீனா 1930 களுக்குப் பின்னர் மோசமான உலகப் பொருளாதார நெருக்கடியைத் தவிர்த்துவிட்டது போல் தோன்றியது. ஆனால் இந்தச் சரிவைச் சமாளிப்பதற்கு பெய்ஜிங் பயன்படுத்திய வழிவகைகளான குறைந்த வட்டிவிகித கடன் மற்றும் பாரிய ஊக்கப் பொதிகள், திரும்ப செலுத்தமுடியாத கடன்களைத் தோற்றுவித்துள்ளன. அவை சீனாவிலும் சர்வதேச அளவிலும் புதிய நிதிய மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையை தோற்றுவிக்கக் கூடும் என்ற அச்சறுத்தலைக் கொடுத்துள்ளன.

கடன் இப்பொழுது உள்ளூர் அரசாங்கங்களை சூழ்ந்துள்ளது. இவை சொத்துக்கள் மற்றும் உள்கட்டுமானங்களில் முதலீடு செய்வதற்காக மிகப் பெரிய அளவில் கடன் வாங்கியுள்ளன. உள்ளூர் அரசாங்கங்கம் பற்றிய முதன்முதலான புள்ளிவிவரங்கள், NAO (National Audit Office) என்னும் தேசிய மேற்பார்வை அலுவலகத்தால் ஜூன் மாதம் வெளியிடப்பட்ட தகவல்கள், 10.7 ட்ரில்லியன் யுவான் அல்லது 1.65 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் என்னும் அதிர்ச்சிதரும் கடன்களை ஜூன் இறுதிவரை காட்டுகின்றன. இது நாட்டின் 2010 ம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தித் தொகையில் கிட்டத்தட்ட 27 சதவிகிதம் ஆகும்.

சர்வதேச தரப்படுத்தும் அமைப்பான மூடிஸ் (Moody’s), கடந்தவாரம் NAO கொடுத்துள்ள எண்ணிக்கையை விட $540 பில்லியன் அதிகமாகக் காட்டியுள்ளது. இதில் திரும்ப செலுத்தமுடியாத கடன்கள் மொத்தத்தில் 8 முதல் 12 சதவிகிதம் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர் அரசாங்கங்க கடனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்குத் திட்டம் இல்லாத நிலையில், சீன வங்கிகள் பற்றிய கடன் வழங்கும் தோற்றம் எதிர்மறையாக திரும்பும் சாத்தியம் பற்றி மூடிஸ் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவை அடித்தளமாகக் கொண்ட சீன உள்ளூராட்சிக் கடன் பற்றிய வல்லுனர் ஒருவரான விக்டன் ஷிஹ் கடன்கள் மொத்தம் 15.4 ல் இருந்து 20.1 டிரில்லியன் யுவானாகக் கூட இருக்கலாம், அதாவது சீனாவில் 2010 மொத்த உள்ளநாட்டு உற்பத்தியில் 40 முதல் 50% என என்று கூறுகிறார். நியூ யோர்க் டைம்ஸிடம் அவர் கூறியது: “கடன் வாங்கியிருக்கும் பெரும்பாலான அரசாங்கத் துறைகள் கடன்களுக்கான வட்டித்தொகைகைளைக் கூடக் கட்ட முடியாது.”

உள்ளூர் அரசாங்கங்களின் பாரிய செலவுகள் சொத்துக்கள் பற்றிய ஊகம் அதிகரிக்க உதவியுள்ளது. இதனால் சொத்துக்களின் விலைகள் பெரிதும் உயர்ந்துவிட்டதுடன், வீடுகள் இருப்பில் மிகப் பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் ஷாங்காய் வளர்ச்சி மையத்தில் சொத்துக்களின் விலை கிட்டத்தட்ட நான்கு மடங்கு பெருகிவிட்டது. இந்த ஆண்டு கொடுத்துள்ள அறிக்கை ஒன்றில், முதலீட்டு வங்கியான Credit Suisse, வுகானை சீனாவில் “தவிர்க்க வேண்டிய 10 உயர்மட்டத்திலுள்ள நகரங்களில் ஒன்றாக” அடையாளம் காட்டி, இப்பொழுதுள்ள இருப்பிலுள்ள வீடுகள்ளை விற்பதற்கே அதற்கு எட்டு ஆண்டுகள் ஆகும் என்று விளக்கியுள்ளது.

உள்ளூர் அரசாங்கங்க கடன் நெருக்கடி, 2008ம் ஆண்டு உலகளவில் வெடித்த நிதியக் கொந்தளிப்புக்கு பெய்ஜிங்கின் பிரதிபலிப்பின் நேரடி விளைவாகும். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானிற்கான சீனாவின் முக்கிய ஏற்றுமதிச் சந்தைதகளில் தீவிர சரிவு 23 மில்லியன் வேலைகள் விரைவாக இழக்கப்படுவதற்கு வழிவகுத்தது. சமூக அமைதியின்மை ஏற்படும் என்ற அச்சத்தில், சீன ஆட்சி 4 ட்ரில்லியன் யுவானுக்கு ஊக்கப் பொதித் திட்டம் ஒன்றை கோடிட்டு பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைக்க முயன்றது. அதே நேரத்தில் 1.2 ட்ரில்லியன் யுவான்களை மட்டுமே கொடுத்ததுடன் எஞ்சியதை உள்ளூர் அதிகாரங்களும் மற்றும் அரச நிறுவனங்களும் நிதியளிப்பதற்கு விட்டுவிட்டது.

இதன் விளைவு கடன் வாங்கும் களியாட்டம் போலாகிவிட்டது. நேரடியாக பத்திரங்கள் வெளியிடுவது தடை செய்யப்பட்ட நிலையில், உள்ளூர் அரசாங்கங்க அதிகாரிகள் முதலீட்டு நிறுவனங்களை நிறுவி அரசாங்கத்திற்குச் சொந்தமான வங்கிகளில் இருந்து கடன் வாங்கின. அவசியமாக தேவைப்படும் பொது மருத்துவ மனைகள், பள்ளிகளுக்கு நிதி செல்லவில்லை. மாறாக நிலச் சொத்துக்கள், உள்கட்டுமானத் திட்டங்கள் ஆகியவற்றிற்குச் சென்றது. இதை ஊக்குவிக்கும் வகையில் பெய்ஜிங் உள்ளூர் அரசாங்கங்க பொருளாதார வளர்ச்சிப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு கொடுத்தது.

உள்ளூர் அரசாங்கங்க கடன் புள்ளிவிவரங்கள் சீனப் பொது நிதியைப் பற்றிய விவரணத்தை தீவிரமாக மாற்றின. மத்திய அரசாங்கத்தின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20%க்கும் குறைவாக ஆயிற்று. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பொதுக்கடன் தரங்களை விட மிக மிகக் குறைவாகும். ஆனால் அமெரிக்க உயர் கல்வியாளர் Minxin Pei ,“சீனாவின் வெடிக்கவிருக்கும் கடன் குண்டு” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள சமீபத்திய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளபடி, உள்ளூராட்சிக் கடன் மற்ற கடன்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்போது சீனாவின் மொத்த கடன் நிலைமை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 70 முதல் 80% என உயர்ந்துவிடுகிறது.

கடனை இறுக்கிப்பிடிக்க பெய்ஜிங் நடவடிக்கை எடுத்துள்ளது. இது உள்ளூர் அரசாங்கங்கள் கடன்களை அடைப்பதையும் கடினமாக்கியுள்ளது. இவற்றில் பாதி அடுத்த இரண்டு ஆண்டுகளில் அடைக்கப்பட வேண்டியவை ஆகும். முதலீட்டு வங்கி UBS ன் சமீபத்திய அறிக்கை உள்ளூர் அரசாங்கங்க முதலீட்டுப் பெருநிறுவனங்கள் அடுத்த சில ஆண்டுகளில் $460 பில்லியன் அளவிற்கு கடன் செலுத்தமுடியாத நிலையைத் தோற்றுவிக்கும் என்று கணித்துள்ளார். மத்திய அரசாங்கம் உள்ளூராட்சி மற்றும் வங்கிகள், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை பிணை எடுக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டால் (ஏற்கனவே இது நடக்கிறது) சரிவு இன்னும் தீவிரம் அடையும்.

கடந்த காலத்தில் சீன உள்ளூர் அரசாங்கங்க நிதிகள் சர்வதேச நிதியச் செய்தி ஊடகத்தில் சிறு குறிப்பைக் கூட பெற்றிருக்காது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் உலக முதலாளித்துவம் தங்கியிருந்ததின் அடையாளமாக சீனாவில் கடன் அளவுகள் உலகப் பொருளாதாரத்தில் பெரும் கவலைகளையும் விளைவுகளையும் தூண்டிவிடுகின்றன.

கடந்த இரு தசாப்தங்களில் மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் சீனாவை உலகின் 10வது பெரிய பொருளாதரம் என்னும் தரத்தில் இருந்து 2ம் மிகப் பெரிய பொருளாதாரம் என்ற நிலைக்கு உயர்த்தின. Chinese Academy of Social Sciences ஏப்ரல் மாதம் கொடுத்த அறிக்கை ஒன்றின்படி, கடந்த ஆண்டு சீனா உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு 30%க்கும் மேலாக பங்களித்தது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா ஆகியவை தேக்கம் உற்ற நிலையில், சீனப் பொருளாதாரம் மெதுவாகச் செல்வது என்பது தற்போதுள்ள உலகப் பொருளாதார நெருக்கடிக்கு சுமையைத்தான் அதிகரிக்கும். ஆஸ்திரேலியா, பிரேசில் போன்ற பெரிய பொருள் உற்பத்தி நாடுகள் முதலில் பாதிக்கப்படும் நாடுகளாக இருக்கும்.

சீனாவிற்குள் உள்ளூராட்சி மற்றும் வங்கிகள் பற்றிய எத்தகைய பிணையெடுப்புச் செலவுகளும் தவிர்க்க முடியாமல், ஏதேனும் ஒரு வகையில், சாதாரண தொழிலாள வர்க்கத்தின்மீது சுமத்தப்படும்; இது சமூக அழுத்தங்களுக்கு எரியூட்டும். 1997-98 ஆசிய நிதிய நெருக்கடிக்குப் பின் பெய்ஜிங் தன் வங்கி முறையை நிலைநிறுத்த பெரிய அரசாங்க வங்கிகளில் இருந்து $335 பில்லியன் மோசமான கடன்களை எடுத்துக் கொள்ள நேரிட்டது. பிணை எடுப்புப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்கு ஆட்சி அரசாங்க நிறுவனங்களை தனியார்மயம் ஆக்கியது. இதனால் 20 மில்லியன் வேலைகள் அழிந்தன. அரசவீடுகள் கட்டும்முறை அகற்றப்பட்டது. சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளில் “கட்டணம் கட்டிப் பயன் பெறுக” திட்டம் தொடக்கப்பட்டது. இவை அனைத்தும் தொழிலாள வர்க்கத்தின்மீது சுமையை அதிகரித்தன.

சீனாவில் தற்போதைய கடன் நெருக்கடி இன்னும் பெரிய அளவில் உள்ளது. எந்தப் பொருளாதார மந்தநிலையும் விரைவில் வேலையின்மையை உயர்த்திவிடும். ஏற்கனவே விலை உயர்வுகள் பற்றிக் கணிசமான சமூக அதிருப்தி உள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடு ஒவ்வொரு ஆண்டும் என்ற கணக்கில் 6.4 சதவிகிதம் அதிகரித்துவிட்டது. இது மூன்று ஆண்டுகளில் மிக அதிகமான சதவிகிதம் ஆகும். உணவு விலை 14 சதவிகிதம் அதிகரித்தது. பன்றி இறைச்சியின் விலை 57% உயர்ந்தது. இன்னும் கூடுதலான பொருளாதரச் சுமைகள் ஆட்சி இப்பொழுது 400 மில்லியன் என்ற வலுவான எண்ணிக்கையை கொண்டுள்ள தொழிலாள வர்க்கத்திடம் இருந்து எதிர்ப்பு மற்றும் தடுப்புக்கள் என்றவகையில் எழுச்சிகள் பற்றி எப்பொழுதும் அஞ்சும் நிலையைத் தூண்டும் சாத்தியப்பாட்டை கொண்டுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளாக சீனாவில் தொடர்ந்த வலுவான வளர்ச்சி சில வர்ணனையாளர்களை சீனா ஒரு முற்றிலும் புதிய பொருளாதார வளர்ச்சி முன்மாதிரியை அளிக்கிறது என்ற ஊகத்தை கொடுக்க வகை செய்தது. உண்மையில் சீனா இப்பொழுது சர்வதேசப் பொருளாதார நெருக்கடியை தோற்றுவித்த அதே உலக முதலாளித்துவ முரண்பாடுகளில் கட்டுண்டு இருக்கிறது. உலக முதலாளித்துவத்தின் வலிமைக்கான ஒரு புதிய மூலாதாரம் என்பதற்கு முற்றிலும் எதிரிடையாக சீனா களிமண்ணாலான கால்களைக் கொண்ட ஒரு பெரிய பொருளாதாரமாக காட்சியளிக்கின்றது.

submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/07/blog-post_28.html"

Saturday, 23 July 2011

* இலங்கை பொருளாதாரத்தின் நம்பிக்கை உயர்வு

புகழ் பெற்ற சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்கள் இரண்டினால் (Moody’s Investors Service Singapore (Pvt) Ltd and Fitch Ratings), இலங்கை பொருளாதாரம் தொடர்பான நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் அடைவு மட்டமானது, 'BB-' என்பதில் இருந்து 'B+' ஆக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தரப்படுத்தல் நிறுவனங்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கையில் தற்போது முதலீடு தொடர்பான அச்சுறுத்தல் குறைவாக காணப்படுகின்றது. அத்துடன் பொருளாதார வளர்ச்சி வீதம், பணவீக்க வீதம், வரவு செலவு திட்டப் பற்றாக்குறை மற்றும் பொதுப் படுகடன் தொடர்பாக திருப்தியளிக்க கூடிய நிலையினை கண்டுள்ளதால் இலங்கைப் பொருளாதாரத்தின் நம்பிக்கை ஒரு படி மேலே உயர்ந்துள்ளது.

2009 ல் 9.9 சதவீதம் (in GDP) எனக் காணப்பட்ட இலங்கையின் வரவு செலவு திட்டப் பற்றாக்குறையினை, 2010 ல் 8 சதவீதமாக குறைக்க முடிந்துள்ளது. இதனை 2011 ல், 6.8 சதவீதமாகவும் 2012 ல், 5.2 சதவீதமாகவும் மேலும் குறைப்பதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதேபோல 2009 ல், இரட்டை தசமதானங்களில் காணப்பட்ட பணவீக்க வீதத்தினை கடந்த ஆண்டில் இருந்து ஒற்றை தசமதானமாகவே வைத்திருக்க இலங்கைப் பொருளாதாரத்தினால் முடிந்துள்ளது.

2011 மற்றும் 2012 காலத்தில், 7.5 - 8 சதவீத பொருளாதார வளர்ச்சியினை பதிவு செய்ய கூடிய வல்லமையினை இலங்கை தற்போது கொண்டுள்ளது. 2009 மார்சில் 1.3 பில்லியன் ஐ.அ.டொலராக காணப்பட்ட இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கினை, 2011 ஏப்ரல் மாதத்தில் 7.2 பில்லியன் ஐ.அ.டொலராக அதிகரிக்க முடிந்துள்ளது.

இதேபோல அரசியல் உறுதி என்ற ஆய்விலும் ஸ்திரம் என்ற அளவில் இருந்து சாதகம் என்ற அளவுக்கு முன்னேறியுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு இலங்கைப் பொருளாதாரத்தின் நாணயம் அல்லது கடன் மீளளிக்கும் ஆற்றல் 'BB-' என்பதில் இருந்து 'B+' ஆக உயர்ந்துள்ளது என சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை தற்போது காணப்படும் பொருளாதார குறிகாட்டிகளின் அடிப்படையில், இலங்கையில் உயர் பொருளாதார வளர்ச்சி (8% - 10%) இப்போதைக்கு சாத்தியம் இல்லை என உலக வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் (Global Economic Prospects 2011) சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/07/blog-post.html"