Thursday 25 August 2011

*''சிலிக்கான் கிங்'' பதவி விலகல்

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து புதன்கிழமை விலகினார் 'சிலிக்கான் கிங்' என வர்ணிக்கப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ்.

உலகின் மிக சக்திவாய்ந்த நிறுவனமாக ஆப்பிளை மாற்றிய ஸ்டீவ் ஜாப்ஸ் பதவி விலகியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் கணையப் புற்றுநோய் காரணமாக அவர் இந்த கடினமான முடிவை மேற்கொண்டுள்ளதாக உள்வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரு அமெரிக்க தம்பதியின் வளர்ப்பு மகன் ஸ்டீவ் ஜாப்ஸ். புத்த மதத்தைச் சேர்ந்தவர். கல்லூரிப் படிப்பைக் கூட முழுமையாக முடிக்காத அவர், எழுபதுகளின் பிற்பகுதியில் தனது நண்பர் ஸ்டீவ் வோஸ்னியாக்குடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

இவரது நிறுவனம் தயாரித்த ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. ஆனால் ஆப்பிள் 2, கம்ப்யூட்டர் உலகில் இவரது நிறுவனத்துக்கான இடத்தை உறுதி செய்தது. 1980-ல் ஆப்பிளை பொது நிறுவனமாக மாற்றி பங்கு வெளியிட்டார். அது அவரை பெரும் கோடீஸ்வரர் ஆக்கியது.

1985-ல் தான் ஆரம்பித்த நிறுவனத்திலிருந்தே விலகிக் கொண்டார் ஸ்டீவ். எல்லா பங்குகளையும் விற்ற அவர், ஆப்பிள் பங்குகளை மட்டும் வைத்துக் கொண்டார். வெளியில் போய் நெக்ஸ்ட் என்ற கம்ப்யூட்டர் நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனம் பின்னர் ஆப்பிளுடன் இணைந்தபோது, ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிளுக்கு வந்தார், இடைக்கால தலைமை செயல் அலுவலராக.

பின்னர் 2000-ல் அவரே முழுமையான CEO என அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு ஸ்டீவ் ஜாப்ஸ் தொட்டதெல்லாம் தங்கம்தான். ஐபோன், ஐபேட், புதுப்புது மேக் கம்ப்யூட்டர்கள் என தொழில்நுட்பத் துறையில், எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது ஆப்பிள் நிறுவனம்.

பாரக் ஒபாமாவுடன் அமர்ந்து விருந்து சாப்பிடும் அளவுக்கு பெரும் விஐபியாகிவிட்டார் ஸ்டீவ்.

14 ஆண்டுகள் அவரது தலைமையில் ஆப்பிள் சாதித்தவை பிரமிக்கத்தக்க வெற்றிகள் என தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அடுத்து ஆப்பிள் புதிய ஐபோன், அடுத்த தலைமுறைக்கான அட்வான்ஸ்டு ஐ பேட் போன்றவற்றை அறிமுகப்படுத்தவிருக்கும் நிலையில் ஸ்டீவ் விலகியுள்ளார்.

"நான் ஒரு நாள் இந்த நிறுவனத்தில் இல்லாமலே போகலாம். அதற்கான நாள் வரும்போது, நிறுவனம் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்" என்பது ஸ்டீவ் ஜாப்ஸ் அடிக்கடி கூறும் வாசகம். அது இப்போது நிகழ்ந்தே விட்டது.

இப்போது ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத் தலைவராகவும், டிம் குக் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுவார்கள் என்றும், ஸ்டீவ் தொடர்ந்து நிறுவனத்துக்கு வழிகாட்டுவார்; முதலீட்டாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால், ஆப்பிளின் இந்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் அச்சத்தைப் போக்கியதாகத் தெரியவில்லை. நேற்று ஸ்டீவ் ஜாப்ஸ் தனது விலகலை அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் ஆப்பிள் நிறுவனப் பங்குகள் 7 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/08/blog-post_25.html"

Wednesday 3 August 2011

* இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனா முதலிடம்


இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளில் சீனா முதலிடம் பெற்றுள்ளதாக நிதி திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்தமாக 1,385 மில்லியன் ஐ.அ.டொலர் பெறுமதியான புதிய கடன்களை இலங்கை பெற்றுள்ளது. இதில் சீனாவிடம் இருந்து மட்டும், 759.8 மில்லியன் ஐ.அ.டொலர் (மொத்த கடனில் 55%) பெறுமதியான கடன் பெற்றுக் கொண்டதாக நிதி திட்டமிடல் அமைச்சு வெளியிட்டள்ள நடு ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே காலத்தில் 413.4 மில்லியன் ஐ.அ.டொலரை வழங்கிய (30%) ஐப்பான் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இது தவிர உலக வங்கி ($.105.8m), ஆசிய அபிவிருத்தி வங்கி ($.89.2m), ஐ.நா. நிறுவனங்கள் ($.8.8m) மற்றும் சீனா, இந்தியா ஆகியவற்றில் இருந்து 1,385 மில்லியன் ஐ.அ.டொலர் பெறுமதியான புதிய கடன்களை இலங்கை பெற்றுள்ளது.

குறிப்பாக வீதி, துறைமுகம், மின்சாரம், நீர் வழங்கள் ஆகிய கீழ்கட்டுமான அபிவிருத்திகளுடன் விவசாயம், மீன் பிடி துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களிற்காகவே இந்த புதிய கடன்கள் பயன்படுத்தப்படுவதாகவும் நிதி திட்டமிடல் அமைச்சின் நடு ஆண்டு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான பிணக்கின் காரணமாக மேற்குலக நாடுகள் உதவிகளை குறைத்து வரும் நிலையில், சீனா. ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையின் பங்காளிகளாக மாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/08/blog-post.html"

Tuesday 2 August 2011

* 30 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து 2013-க்குள் நீக்கும் HSBC


லாபம் பார்க்க போராடும் நாடுகளில் சுமார் 30 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்க சர்வதேச வங்கியான HSBC முடிவு செய்துள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் HSBC. வங்கியின் புதிய தலைவராக ஸ்டூவர்ட் கலிவர் பொறுப்பேற்றுள்ளார். இந்த வங்கியில் உலகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர். அதிலும் ஆசியாவில் தான் அதிகமானோர் பணி புரிகின்றனர்.

ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் வரிக்கு முந்தைய லாபம் 11.5 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த வங்கிப் பங்குகளின் விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வரிக்கு முந்தைய லாபம் 11.1 பில்லியனாக இருந்தது.

லத்தீன் அமெரிக்கா, அமெரி்க்கா, இஙகிலாந்து, பிரான்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வங்கியை மறுசீரமைக்கவுள்ளதால் 5 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்கியதாக வங்கி அறிவித்துள்ளது. வரும் 2013-ம் ஆண்டிற்குள் மேலும் 25, 000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது.

இது குறித்து வங்கியின் தலைவர் ஸ்டூவர்ட் கூறியதாவது,

பணி நீக்கம் தொடரும். தற்போதில் இருந்து வரும் 2013-ம் ஆண்டு இறுதிக்குள் சுமார் 25 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றார்.

மொத்தமுள்ள ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பணி நீக்கம் செய்யப்படவிருக்கின்றனர். ஆசியாவில் அதிக கவனம் செலுத்துவதற்காகத் தான் இந்தி ஆட்குறைப்பு என்று கூறப்படுகின்றது.

உலகெல்லாம் வங்கி அமைக்கும் திட்டத்தை HSBC கைவிட்டுள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/08/30-2013-hsbc.html"