Friday, 19 March 2010

* பணத்தின் உண்மையான மதிப்பு

பொருளாதாரத் துறையில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய முதல் பாடம் பணத்தின் உண்மையான மதிப்பை அறிந்து கொள்வது தான். காலம் பொன் போன்றது; அதன் மதிப்பை அறியாமல் கால விரயம் செய்பவர்கள் சமுதாயப் பிணி. பணமும், காலமும் தராசில் நிறுக்கப் பட்டால் இரண்டும் ஒரு நிறை, ஒரு எடை.


பங்குகள் வாங்கும் போது விலையைத் தான் பார்க்கிறோமே தவிர, வாங்குகின்ற தொழிலின் மதிப்பைப் பார்ப்பதேயில்லை. 'அதெல்லாம் எப்படிப் பாக்கிறது?' கேள்வி எழலாம். உலகளாவிய நியதி ஒன்று சொல்கிறேன்.

ஒரு நிறுவனத்தின் பங்கு விலை, அது இன்று முதல் உலகம் (அல்லது அந்த நிறுவனம்) அழியும் வரை ஈட்டித் தரும் லாபத்தின் தற்போதைய மதிப்பின் கூட்டுத் தொகைக்குச் சமம். முதல் முறை வாசிக்கும் போது புரிவதற்குச் சற்று கடினமாக இருக்கலாம். மேற்கொண்டு படித்துவிட்டு, பதிவின் இறுதியில் இன்னோர் தடவை திருப்பி வாசித்தால் புரிவது உறுதி.

அதற்கு முன் தற்போதைய மதிப்பைப் பற்றிய ஒரு சிறு பார்வை.இன்றைய நூறு ரூபாய் நாளைய நூறு ரூபாயை விடப் பெரிது. சுமார் 5% பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால், அடுத்த வருடம் கிடைக்கும் ரூ100, இன்றைய ரூ95 க்குச் சமம். இது தான் வருங்காலப் பணத்தின் தற்போதைய மதிப்பு (present value of future cash). ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து ரூ100 சம்பாதிக்கிறோம் எனில், அந்த சம்பாத்தியத்தின் தற்போதைய மொத்த மதிப்பு ரூ433.00.


ஆண்டு வருங்கால
மதிப்பு



தற்போதைய
மதிப்பு

1
100



95.2

2
100



90.7

3
100



86.4

4
100



82.3

5
100



78.4



மொத்தம்







433


யாராவது உங்களிடம் 100 ரூபாய் கடன் வாங்கி 5 வருடங்களில் திருப்பித்தரேன் என்றால்'' 78.4 ரூபாய்க்கு மேல் தர முடியாது என்று சொல்லிவிட வேண்டும்.(உதாரணத்துக்காக குறிப்பிடுகிறேன்)

சரி, தற்போதைய மதிப்பு (PV - Present value) பற்றிப் பார்த்தோம். ஒரு தொழிலில் முதலீடு செய்யும் போது எப்படி இதை பயன்படுத்துவது என ஒரு எளிய உதாரணம் கொண்டு ஆராயலாம்.

திரு.சங்கர் கார் ஒன்றை, ஓட்டுனர் வைத்து வாடகைக்கு விட்டுச் சம்பாதித்து வருகிறார். ரொம்பப் பழைய காராகையால் இன்னும் மூன்று வருடம் தான் ஓடும். அதற்கு மேல் அதைப் பேரிச்சம் பழத்துக்குத் தான் போடவேண்டும். சும்மா ஜோக்குக்காகச் சொன்னாலும், மூன்று வருடத்தில் விற்றால் ஒன்றரை இலட்சம் கிடைக்கும். அதற்கு மேல் வண்டி ஓடாது என வைத்துக் கொள்வோம். சீசனுக்குத் தகுந்த மாதிரி வருடா வருடம் ஓட்டுனர் சம்பளம், அரசுக்கான வரி இவையெல்லாம் போக கிடைக்கும் இலாபத்தையும் கீழே கொடுத்துள்ளோம். நம் கணக்கில் பணவீக்க வீதம் 5% என்பதாகக் கொள்வோம்.


முதலாம் ஆண்டு முடிவில்:

கார் வாடகையில் கிடைத்த இலாபம் = ரூ.60,000

அதன் தற்போதைய மதிப்பு = ரூ.57,120

இரண்டாமாண்டு முடிவில்:

கார் வாடகையில் கிடைத்த இலாபம் = ரூ.50,000

அதன் தற்போதைய மதிப்பு = ரூ.45,350

மூன்றாமாண்டு முடிவில்:

கார் வாடகையில் கிடைத்த இலாபம் = ரூ.60,000
கார் விற்ற காசு = ரூ.150,000
மொத்தப் பணம் = ரூ.210,000

அதன் தற்போதைய மதிப்பு = ரூ.181,440

மூன்று வருடத்திலும் கிடைக்கும் மொத்தப் பணத்தின் நிகர மதிப்பு = 57,120 + 45,350 + 181,440 = ரூ.283,910.


இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால், சங்கரிடம் இருந்து கார் பிசினஸை நீங்கள் வாங்கினால்,ரூ.283,910 மேல் கொடுப்பது புத்திசாலித்தனமல்ல. அதே ஒரு நிறுவனமாக இருந்து அதில் 1000 பங்குகள் இருந்தால், பங்கு ஒன்றுக்கு 284 ரூபாய் தான் அதிகபட்ச விலை. சந்தையில் 400 ரூபாய்க்கு அவை விற்பனையானால், நீங்கள் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை.

இப்பதிவின் ஆரம்பத்தின் சொன்ன உலக நியதியை மீண்டுமொரு முறை வாசிக்கலாமா? "ஒரு நிறுவனத்தின் பங்கு விலை, அது இன்று முதல் உலகம் (அல்லது அந்த நிறுவனம்) அழியும் வரை ஈட்டித் தரும் லாபத்தின் தற்போதைய மதிப்பின் கூட்டுத் தொகைக்குச் சமம்."

தற்போதைய பணமதிப்புத் தத்துவம் வாழ்வின் எல்லா இடங்களிலும் கையாளப்படலாம். பங்கு முதலீடு, கடன் கொடுத்தல், ஆராய்ச்சியில் அதிகப் படியான பணத்தை விரயமாக்குதல், கடன் வாங்கிப் மேல் படிப்புப் படித்தல், வங்கி வைப்பீட்டுத் திட்டத்தில் பணம் போடுதல் என எல்லாவற்றிலும்..

வளம் பெறுவோம்.


பி.கு:

1. பணவீக்கம் 5% என்பது கணக்கிட எளிதான ஒரு கற்பனை. நிஜ வாழ்வில் இதை விடக் குறைவாகவோ, அதிகமாகவோ அது இருக்கலாம்.

2. சங்கர் கார் தொழிலில் (3 வருடமும்) கிடைக்கும் வருவாய் எளிதாக முன் கூட்டியே நிர்ணயம் செய்தோம். நடைமுறையில் அது சாத்தியமல்ல. ஒரு தொழில் சிறக்குமா சிறக்காதா, எவ்வளவு வருவாய் ஈட்டித் தரும் என்பதெல்லாம் அறுதியிட்டுக் கூற முடியாத விஷயங்கள். பங்குச் சந்தையில் விற்று, வாங்கும் எவரும் தத்தமது எதிர்பார்ப்புகளின் அடிப்படையிலேயே விலையை நிர்ணயிப்பார்கள் (இதுவும் ஒரு கற்பனையா??)

3. சுலபமாக கணக்குப் போட ஏதுவாக, கார் வாடகைக்கு விடும் தொழிலின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் எனக் கொண்டோம். மூன்று வருடத்தில் மண்டையைப் போடும் நிறுவனங்கள் அதிகமாக இருப்பதில்லை என்பது ஆறுதல்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/blog-post_19.html"

4 comments:

A.V.Roy. said...

Super & thx for the sharing da...
well done... :))

A.V.Roy. said...

Super & thx for the sharing da...
well done... :))

Subankan said...

பகிர்வுக்கு நன்றி அச்சு

Anonymous said...

Good brief and this fill someone in on helped me alot in my college assignement. Thank you on your information.