Saturday 27 March 2010

* கடனை திருப்பிச் செலுத்த அவகாசம் கேட்கிறது துபாய் வேர்ல்ட்!

சுமார் 2 ஆயிரத்து 200 கோடி அமெரிக்க டொலர் மதிப்பிலான கடன்களை திருப்பிச் செலுத்த எட்டு ஆண்டுகள் கால அவகாசம் கோருகிறது துபாய் வேர்ல்ட் நிறுவனம்.

துபாய் அரசு பெரும்பான்மைப் பங்குகளை வைத்துள்ள துபாய் வேல்ர்டு( நிறுவனம், கடந்தாண்டு திடீரென தனது கடனாளர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்தது.

இதனால் துபாய் ரியல் எஸ்டேட் மார்கெட் அடியோடு சரிந்தது. பங்குச் சந்தையிலும் பதட்டம் நிலவியது,ஏராளமானோர் வேலையிழந்தனர்.

பிரிட்டனின் ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து, ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட், எச்எஸ்பிசி, லாயிட்ஸ் வங்கி குழுமம் உள்ளிட்ட சுமார் 100 வங்கிகளுக்கு 2 ஆயிரத்து 600 கோடி அமெரிக்க டொலர் அளவுக்கு கடன் செலுத்த வேண்டியிருந்தது.

துபாய் வேர்ல்ட் நிறுவனத்தின் அனைத்துக் கடன்களையும் முழுவதுமாக ஒரு குறிப்பிட்ட கெடுவில், ஒரே செட்டில்மெண்ட்டில் முடிக்க துபாய் அரசின் உயர்மட்ட நிர்வாகிகள் முடிவு செய்திருந்ததாக செய்திகள் வெளியாயின.

துபாய் வேர்ல்டின் துணை நிறுவனங்களுக்கு கடன் கொடுத்துள்ள அனைத்து முதலீட்டாளர்களையும் அழைத்து இதுகுறித்து அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதம் ஆலோசனை நடத்தினர்.

துபாய் ஆட்சியாளரின் உறவினரும் துபாய் நிதிக் குழுவின் தலைவருமான ஷேக் அஹ்மத் பின் சயீத் அல் மக்டோம் மற்றும் துணைத் தலைவர் மொஹம்மத் அல் ஷைபனிடோ ஆகியோர் லண்டனில் நடந்த முதலீட்டாளர் கூட்டத்தில் பங்கேற்று, துபாய் வேர்ல்டின் பிரச்சினை குறித்து விவாதித்தனர்.

இந்நிலையில், இக்கடன் தொகையில் சுமார் 2 ஆயிரத்து 200 கோடி அமெரிக்க டொலர் தொகையை திருப்பிச் செலுத்த எட்டு ஆண்டு அவகாசம் வழங்குமாறு துபாய் வேர்ல்ட் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

இந்த அவகாசம் கிடைத்தால் ஒட்டுமொத்த தொகையையும் முழுமையாக திருப்பிச் செலுத்திவிட முடியும் என துபாய் வேர்ல்ட் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/blog-post_27.html"

1 comment:

Anonymous said...

இந்த துபாய் மாதிரி தொளிலாளரை கசக்கி பிழிய உலகத்தில் எந்த மோசமான நாடும் கிடையாது.உலகதின் அவமானம் துபாய்.