Friday 30 April 2010

* மைக்ரோசாப்டை பின்னுக்குத் தள்ளிய ஆப்பிள்!

அன்றைக்கு மிகவும் சிக்கலில் மூழ்கியிருந்தது ஆப்பிள் நிறுவனம். அதன் தயாரிப்புகள் எதுவும் வேலைக்காகவில்லை. அந்த சமயத்தில் இந்த நிறுவனத்தில் 150 மில்லியன் டாலர் முதலீடு செய்து, முட்டுக் கொடுத்து நிறுத்தியது ஒரு நிறுவனம்.... அது.. ஆப்பிளின் பரம எதிரி எனப்பட்ட பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட்!.

கிட்டத்தட்ட மூழ்கிக் கொண்டிருந்த ஒரு கப்பலை மேலே கொண்டு வந்ததைப் போன்ற ஒரு பணியை பில்கேட்ஸ் செய்தார். வாக்குரிமையில்லாத பங்குகளை அவர் வாங்கிக் கொண்டார். அத்துடன் ஆப்பிள் கம்ப்யூட்டர்களிலும் செயல்படத்தக்க விதத்தில் மைக்ரோசாப்ட் மென்மொருளை உருவாக்கிக் கொடுத்தார் (முன்பு ஆப்பிள் கணிப்பொறிகளை வாங்க அனைவரும் தயங்கியதற்குக் காரணம், மைக்ரோசாப்ட் மென்பொருளை அவற்றில் செயல்படுத்த முடியாமலிருந்ததுதான்!). அன்றைக்கு கம்ப்யூட்டர் உலகின் முடிசூடா மன்னன் மைக்ரோசாப்ட்தான். அதற்கு மாற்றே இல்லாத நிலை.


13 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நிலைமை அப்படியே தலைகீழ்... ஐபோன், ஐபாட், ஐபேட் என ஆப்பிள் தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலை. சந்தை மூலதன மதிப்பில் இன்று மைக்ரோசாப்டை அப்படியே பின்னுக்குத் தள்ளிவிட்டது ஸ்டீவ் ஜாப்ஸின் தலைமையிலான ஆப்பிள்!

இன்றைய நிலவரப்படி ஆப்பிளின் சந்தை மதிப்பு 241.5 பில்லியன். மைக்ரோசாப்ட் சந்தை மதிப்பு 239.5 பில்லியன் டாலர்!

அமெரிக்க நிறுவனங்களில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது ஆப்பிளுக்கு. அடுத்த இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள மைக்ரோசாப்ட்.


நிச்சயம் தனது நிறுவனத்துக்கு இப்படியொரு நிலை வரும் என்று பில்கேட்ஸ் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார் என்கிறது அமெரிக்காவின் பிரபல பத்திரிகை. அதாவது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதென்பார்களே... அப்படி ஒரு நிலை பில்கேட்ஸுக்கு. காரணம், ஆப்பிளில் முதலீடு செய்யுமாறு கூவிக் கூவி அழைத்தும் ஒரு டாலர் தரக்கூட ஒருவரும் முன்வரவில்லை அன்றைக்கு!

அன்று ஸ்டீவ் ஜாப்ஸுக்கு ஒரு பில்கேட்ஸ் தேவைப்பட்டார். இன்று சரிவிலிருந்து நிமிர பில்கேட்ஸுக்கு ஒரு ஸ்டீவ் பால்மர் (Steve Ballmer) (மைக்ரோசாப்ட்டின் இன்றைய CEO) மட்டும் போதாது, ஸ்டீவ் ஜாப்ஸ்களும் தேவை என்று கமெண்ட் அடித்துள்ளது அந்தப் பத்திரிகை.(Jobs then needed Bill Gates far more than Gates needed Jobs. )

Source:-

Apple now bigger than Microsoft in m-cap-Times of india

Apple tops Microsoft on S&P 500, index's guardian says submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/blog-post_30.html"

Wednesday 21 April 2010

* பிரிட்டிஷ் ஏர்வேஸ் - ஐபீரியா 'மெகா' இணைப்பு

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமும் ஸ்பெயினின் ஐபீரியா நிறுவனமும் இணைகின்றன.

இதன் மூலம் உலகின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் - ஐபீரியா உருவெடுத்துள்ளது.

இந்த இணைப்புக்கான முயற்சி கடந்த ஆண்டே துவங்கிவிட்டது. அனைத்து நடைமுறைகளும் இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இணைப்பின் மூலம் 400 மில்லியன் யூரோ சேமிக்கப்படும் என்றும், இது பங்குதாரர்கள், பயணிகள் மற்றும் தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும் திட்டம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இந்த இணைப்புக்குப் பின் புதிதாக நிறுவனம் உருவாக்கப்படாது என்றும், ஏற்கெனவே உள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஐபீரியா அவற்றின் சொந்தப் பெயரிலேயே இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த இணைப்புக்குப் பிறகு 408 விமானங்களுடன் 200 விமான நிலையங்களில் 58 மில்லியன் பயணிகளுடன் இயங்கும் பெரிய விமான போக்குவரத்து நிறுவனமாக இது திகழும்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்குகிறது. மேலும் நிறுவனத்தின் ஊழியர்கள் வேறு தொடர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நேரத்தில் இந்த இணைப்பு பெரும் இழப்பிலிருந்து காக்கும் என நம்புகிறது பிரிட்டிஷ் ஏர்வேஸ். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/blog-post_21.html"

Monday 19 April 2010

* பிரிட்டிஷ் பங்குச்சந்தையில் மோசடி

பிரிட்டிஷ் பங்குச் சந்தையை மோசடி செய்த குற்றத்துக்காக வெளிநாடு வாழ் இந்தியர்கள் இருவருக்கு அபராதமும் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஈடுபடத் தடையும் விதித்துள்ளது பிரிட்டன்.

சமீர் பட்டேல் மற்றும் ராபின் சாப்ரா ஆகிய இருவரும் லண்டனில் வசிக்கும் இந்திய முதலீட்டாளர்கள். பிரிட்டிஷ் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்தனர்.

இவர்களில் ராபின் சப்ரா, எவால்யுவேஷன் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தில் அனலிஸ்டாக பணியாற்றி வந்தார். அப்போது பங்குச் சந்தை மற்றும் பங்குகள் பற்றிய ரகசிய விவரங்களை தனது நண்பரான சமிர் பட்டேலுக்கு அவ்வப்போது சொல்லி வந்துள்ளார். 3 சீஸன்களில் இதுபோல் செய்து, ஏராளமான லாபத்தைப் பெற்றுள்ளனர் இருவரும்.

இந்த விவரங்களை பிரிட்டிஷ் நிதி சேவை முகமை கண்டுபிடித்து, இருவருக்கும் முறையே £180,541 மற்றும் £ 95,000 பவுண்டுகள் அபராதமாக விதித்துள்ளது.மேலும் சமீர் பட்டேல், ராபின் சத்தா இருவருமே தொடர்ந்து பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடத் தடையும் விதித்துள்ளது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/blog-post_19.html"

Thursday 15 April 2010

* ஒரே நாளில் 3 லட்சம் ஐபேட்( iPad) விற்பனை!

ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கையடக்க கம்ப்யூட்டரான ஐபேட் ஒரே நாளில் 3 லட்சம் ஐபேட்களை விற்று சாதனை படைத்துள்ளது.

மேலும், இந்த கம்ப்யூட்டருக்கு தேவையான மென்பொருள்களை தரவிறக்கம் செய்வதிலும் பெரும் சாதனை நிகழ்ந்துள்ளது.

ஒரு மில்லியன் ஐபேட் அப்ளிகேஷன் சாப்ட்வேர் மற்றும் 2,50,000 எலக்ட்ரானிக் புத்தகங்கள் தரவிறக்கம் செய்துள்ளனர் வாடிக்கையாளர்கள்.

ஜூன் மாதத்துக்குள் 8.5 லட்சம் ஐபேட்கள் விற்க வேண்டும் என்பது ஆப்பிள் நிறுவன இலக்கு. ஆனால் இந்த வேகத்தில் ஐபேட்கள் விற்பனை தொடர்ந்தால், விற்பனை அளவு எங்கோ போய்விடும் என்கிறார்கள் எலெக்ட்ரானிக் சந்தை வல்லுநர்கள்.

ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட் போன்றவை இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்போது ஐபேட் எனப்படும் கையடக்க கம்ப்யூட்டருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இது போன்ற கம்ப்யூட்டரை வடிவமைத்து தோல்வி கண்ட நிலையில், ஆப்பிள் நிறுவனம் பெரும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/3-ipad.html"

Wednesday 14 April 2010

* தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


நண்பர்கள் அனைவரும் மனம் முழுதும் மகிழ்ச்சி பொங்க நலமுடனும் வளமுடனும், வாழ பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா தளத்தின் இனிய புத்தாண்டு , மற்றும் சித்திரைத் திரு நாள் வாழ்த்துக்கள்.

submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/blog-post_14.html"

Tuesday 13 April 2010

* துபாயில் வாடகை 5 சதவீதம் வீழ்ச்சி


இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் துபாயில் வாடகை 5 சதவிகித அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

கிளட்டன்ஸ் என்ற துபாய் நிறுவனம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், 2008-ம் ஆண்டிலிருந்து துபாய் ரியல் எஸ்டேட் மார்க்கெட் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகவும், இதன் அளவு 45 சதவிகிதத்தை எட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வணிக மற்றும் குடியிருப்பு வாடகைகளில் 5 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கிளட்டன் தெரவித்துள்ளது.

அதேபோல, நிலம் மற்றும் கட்டடங்கள் விற்பனையிலும் 2.9 சதவிகித வீழ்ச்சி காணப்படுகிறதாம். இரண்டாம் காலாண்டில் மேலும் பல புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்பதால் இந்த நிலை இன்னும் மோசமாகும் என்று அந்த ஆய்வு கூறுகிறது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/5.html"

Friday 9 April 2010

* இந்திய வங்கியின் கிளை மீண்டும் யாழ்ப்பாணத்தில்?

யாழ்ப்பாணத்தில் இந்திய வங்கியின் கிளையை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய வங்கியின் தலைவரும் நிர்வாகப் பணிப்பாளருமான டி.எம். பாஸின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் யாழ். நிலைமையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க விசேட குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த இரண்டு வருட காலத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இந்திய வங்கியின் கிளைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/blog-post.html"

Thursday 8 April 2010

* டொயோட்டாவுக்கு 16.4 மில்லியன் அபராதம்

பாதுகாப்பு குறைபாடுகளுக்காக டொயோட்டா மோட்டார் நிறுவனத்துக்கு 16.4 மில்லியன் டொலர் அபராதம் விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா, தனது கார்களில் பெரும் பாதுகாப்பு குறைபாடு இருப்பது தெரிந்தும் அதை வாடிக்கையாளர்களுக்கு விற்றுள்ளதாக அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.

அதற்கேற்ப, தான் உற்பத்தி செய்து விற்ற 23 லட்சம் கார்களை சமீபத்தில் திரும்பப் பெறுவதாக அறிவித்தது டொயோட்டா. மேலும் இந்தக் கார்களில் ஏராளமான குறைபாடுகள் இருப்பதையும் ஒப்புக் கொண்டது.

இதைத் தொடர்ந்து குறைபாடுள்ள கார்களை விற்பனை செய்ததற்காக டொயோட்டா நிறுவனத்துக்கு 16.4 மில்லியன் டொலர் அபராதம் விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

உலகில் ஒரு கார் உற்பத்தி நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச அபராதம் இதுவே. இதற்கு முன் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 1 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டது submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/164.html"

Wednesday 7 April 2010

* மேலும் 25,000 கார்களைத் திரும்பப் பெறும் Nissan

25000 நிஸ்ஸான்(Nissan) கார் தயாரிப்பு நிறுவனம் கார்களை திரும்பப் பெறுகிறது. இவை அனைத்தும் ஜப்பானில் விற்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கார்களின் அக்ஸலரேட்டர் பெடல் சரியாக இல்லாததால் தொடர்ந்து புகார்கள் வருவதைத் தொடர்ந்து இந்த திரும்பப் பெறும் முடிவை அறிவித்துள்ளது Nissan.

ஏற்கெனவே 540000 கார்களைத் திரும்பப் பெற்று பழுது நீக்கும் பணியில் இறங்கியுள்ளது நிஸ்ஸான். இந்த கார்களில் அக்ஸலரேட்டர் பெடல் பிரச்சினை, கேஸ் மூடி பிரச்சினை, எரிபொருள் கசிவு பிரச்சினை போன்றவற்றால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் விற்கப்பட்ட கார்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

செபைரோ(Cefiro), சன்னி(Sunny), ப்ளூபர்டு(Bluebird), பிரிமிரா(Primera) மற்றும் டினோ(Tino) ஆகிய மாடல்களைச் சேர்ந்த கார்களில்தான் இந்த பிரச்சினைகள் அதிகம் உள்ளதாக நிஸ்ஸான் அறிவித்துள்ளது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/25000-nissan.html"