Showing posts with label 100 வது பதிப்பு. Show all posts
Showing posts with label 100 வது பதிப்பு. Show all posts

Wednesday, 9 December 2009

* என்னோட 100 வது பதிப்பு

நான் வலைப்பதிவு எழுதத் தொடங்கி மூன்று மாதங்களாகிறது. எழுதலாமா, வேண்டாமா என்ற பலமான யோசனைக்குப் பின், சரி ஆனது ஆகட்டும் என்று முடிவு செய்து இந்தப் பதிவினைத் தொடங்கினேன்.


கல்லூரியில் படிக்கும் பொழுது, எனது இரு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கையெழுத்துப் பிரதி கொண்டுவர முடிவு செய்தோம். சில வாரங்கள் யோசித்து எழுதி, நகலிட்டு சிலப் பிரதிகளை நண்பர்களிடையே விநியோகித்தோம். அதற்கு கிடைத்த அபரிதமான வரவேற்பைப் பார்த்து, போதுமடா சாமி என்று ஒரே இதழுடன் முடித்துக் கொண்டோம்.

கடந்த காலங்களை அசைப் போட்டுக் கொண்டே தான் வலைப்பதிவைத் தொடங்கினேன். தற்பொழுது குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கும் ஆர்வமுள்ளத் துறையைப் பற்றி எழுதுவதே எளிதாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் பங்குச் சந்தையைப் பற்றி எழுதினேன். எழுதத் தொடங்கிய பொழுது வரவேற்பு ஆரவாரமாக இருந்தாலும், பின் பின்னூட்டங்கள் குறைந்துப் போனது. பின்னூட்டம் ஊக்க சக்தியளிக்கும் டானிக் போன்றது. ஒரு பின்னூட்டம் கிடைத்தால் கூட மனதில் ஒரு சிறு சந்தோஷம் ஏற்படும். பின்னூட்டங்கள் கிடைக்காதப் பொழுது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கும். ஆனால் இப்பொழுதுதெல்லாம் பின்னூட்டங்கள் கிடைக்காமல் போனால் வருத்தம் ஏற்படுவதில்லை. பழகிப் போய் விட்டது.

நமக்கு ஏன் பின்னூட்டங்கள் வருவதில்லை என்று யோசிக்கும் பொழுது நாம் எத்தனைப் பதிவுகளுக்கு பின்னூட்டம் கொடுத்துள்ளோம் என்று நினைத்துப் பார்ப்பேன். நான் பலப் பதிவுகளைப் படித்து ரசித்திருக்கிறேன். ஆனால் பின்னூட்டம் கொடுத்தது கிடையாது. நம்மைப் போலத் தானே பிறரும் இருப்பார்கள் என்று நினைத்துக் கொள்வேன். குடும்பம், படிப்பு என்று பல வேலைகளுக்கு இடையே கிடைக்கும் நேரத்தைத் தான் வலைப்பதிவிற்காகச் செலவிடுவேன். கிடைக்கும் கொஞ்ச நேரத்தில், பின்னூட்டங்களைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் ஒவ்வொரு பதிவாகப் படித்துக் கொண்டே சென்று விடுவேன். என்னைப் போலவே நிறையப் பேர் இருக்கக் கூடும்.

இந்த மனநிலைக்கு நாம் பழகிக் கொண்டால் நம்முடைய இயற்கையான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கும் என்றே நான் நினைக்கிறேன். பின்னூட்டங்களுக்காக எழுதும் பொழுது எழுத்தில் ஒரு செயற்கைத் தனம் தெரிகிறது. பின்னூட்டங்களைப் பெற வேண்டும் என்று எழுதப்படும் சிலப் பதிவுகளில் இந்த செயற்கைத்தனம் அப்பட்டமாகத் தெரியும். இதைப் போலவே முகமூடி அணிந்து எழுதப்படும் சில வலைப்பதிவுகள் ரசிக்கத்தக்கவையாகவே இருக்கிறது. நிஜத்தில் எழுதமுடியாமால் நிழலாக எழுதும் பொழுது கிடைக்கும் சுதந்திரம் அந்த எழுத்தில் பிரதிபலிக்கும். ஆனால் அதே சுதந்திரம் சில நேரங்களில் எல்லை மீறி அருவருப்பாகவும் இருக்கிறது.

வலைப்பதிவுகள் பெருகிக் கொண்டே இருக்கிறது. நிறையப் பதிவுகள் தனித்தன்மையுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது ஆரோக்கியமானச் சூழல் தான். எழுத வேண்டும் என்ற ஆவல் பலருக்கு இருக்கிறது. யார் சிறப்பாக எழுதுகிறார்கள் என்று தனிப்பட்டியலிட நான் விரும்பவில்லை. ஒவ்வொருவரின் எழுத்தும் ஒவ்வொரு பாணியில் சிறப்பாகவே இருக்கிறது.

இந்த இடுகை என்னோட 100 வது இடுகை. அப்படி, இப்படி என்று நானும் நூறாவது இடுகைகள் போட்டாச்சு. உங்கள் அனைவரின் அன்பாலும்,பாசத்தாலும் 100 வரை போட்டாச்சு...




நான் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது என்பதைக் காட்டுகிறது.........






உங்கள் அனைவரின் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/100.html"