Wednesday 4 November 2015

விசேட ஆதாய வரி ஏன் தவிர்க்கப்பட வேண்டும்


அச்சுதன் ஸ்ரீரங்கன்

நிதிய முகாமையாளர் (Fund Manager) GIH Capital Ltd

கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற அரசாங்கத்தின் இடைக்கால வரவு-செலவுதிட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்ட விசேட ஆதாய வரி (Super Gains Tax) ஆனது, இலங்கையின் வர்த்தக சமூகத்தில் உள்ள ஒரு சில நிறுவனங்கள் மற்றும் குழுமங்களின் வளர்ச்சி நிலையை வெகுவாகப் பாதிப்படையச் செய்யும். இவ் விசேட ஆதாய வரியானது ஒரு பின்னோக்கிய வரி (Retrospective Taxes) திட்டமாகும். முந்தைய அரசின் ஆதரவுடன் கடந்த பல ஆண்டுகளாக இலாபம் சம்பாதித்த சில நிறுவனங்கள் மற்றும் குழுமங்களை நோக்கியதாக இவ் விசேட ஆதாய வரியானது காணப்படுகின்றது.

இந்த வகையான விசேட ஆதாய வரிகள், ஒரு புதிய பரிணாமமான வரிகள் அல்ல. ஏனைய பல நாடுகளில் ஏற்கெனவே இவை பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக 1997ஆம் ஆண்டில் பிரிட்டனில் மீண்டும் ஆட்சிக்கு வந்த தொழிற்கட்சி, முன்னைய பழமைவாதிகள் கட்சியின் ஆட்சியின் கீழ் தனியார் மயமாக்கப்பட்டு, மிகையான இலாபங்களை ஈட்டிய நிறுவனங்கள் மீது, 23சதவீத மிகை ஆதாய வரியை விதித்தது.

ஆய்வாளர்களின் கருத்துப்படி, மிகையான இலாபங்கள் ஈட்டுவதாக அரசால் குறிப்பிட்டுள்ள அந்தச் சில நிறுவனங்கள் மற்றும் குழுமங்கள் இன்னும் உத்தேச வரைவில் உள்ளடக்கப்படவில்லை. ஆனால், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பல உயர்மட்ட நிறுவனங்களின் கடந்த கால இலாபங்கள் மீது திணிக்கப்பட உள்ள விசேட ஆதாய வரியானது, அவ் நிறுவனங்களின் குறுகிய கால பணப்புழக்கத்தில் ஒரு பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தவல்லது.

இந்த புதிய வரித் திட்டமானது, 2013-2014ஆம் ஆண்டுகளில் வரிக்கு முந்தைய 2,000 மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட இலாபத்தினைச் சம்பாதித்த ஏதேனும் நிறுவனங்கள் மற்றும் குழுமங்களின் இலாபத்தில் 25 சதவீதத்தை விசேட ஆதாய வரியாக (Super Gains Tax) செலுத்துவதற்கு கடப்பாடுடையவராவார். ஏற்கெனவே, தங்கள் இலாபத்துக்கு வரி செலுத்திய நிறுவனங்கள் மற்றும் குழுமங்களின் நிதி அறிக்கைகள் மீது இத்தகைய விசேட வரிகள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். திட்டமிடப்பட்டுள்ள விசேட ஆதாய

வரியானது, ஒரு பின்னோக்கிய வரி குறிப்பிடப்படும் போது, இதன் சுமைகளை இந்த நிறுவனங்கள் தற்போதைய பங்குதாரர்கள் ஏற்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

இலங்கை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH), இலங்கை டிஸ்டிலரீஸ் கம்பனி (DCSL) , சிலோன் டொபாக்கோ கம்பனி (CTC), கார்சன்ஸ், புகிட் டரா, எயிற்கின் ஸ்பென்ஸ், நெஸ்லே லங்கா (Nestle) , அக்சஸ் என்ஜினியரிங், இலங்கை இந்திய எண்ணெய் (கூட்டுத்தாபனம்) (LIOC) , செவ்ரோன் லுபிரிகன்ஸ், ஆசிய ஹோட்டல், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டோக்கியோ சீமெந்து ஆகியவை இவ் விசேட ஆதாய வரி விதிப்பில் அடங்குகின்றன. மேலும் கொமர்ஷியல் வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி, சம்பத் வங்கி, சென்ரல் பைனான்ஸ், பீபள்ஸ் லீசிங் அன்ட் பைனான்ஸ், செலிங்கோ இன்சூரன்ஸ், செலான் வங்கி ஆகிய நிதி மற்றும் வங்கித் துறை சார்ந்த நிறுவனங்களும் அடங்க வாய்ப்புள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் பெருநிறுவன வரியாக (Corporate Taxes) 28 சதவீதத்தை ஏற்கெனவே செலுத்தியுள்ளன. அதற்கு மேலதிகமாக அறவிடப்படவுள்ள விசேட ஆதாய வரி 25 சதவீதத்தையும் சேர்த்து மொத்தமாக, 53 சதவீதத்தைத் தங்களின் இலாபத்தில் வரியாக நிறுவனங்கள், அரசாங்கத்துக்குச் செலுத்த நேரிடும். இவ் அதிகரிப்பானது தற்போதைய ஆசிய பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான குறைந்த வரி விகிதங்கள் கொண்ட நாடுகளில் ஒன்றாக முதலீட்டாளர்களுக்கு கருதப்படுகின்ற இலங்கையின் புதிய முதலீட்டு திட்டங்களுக்கு தடைக்கல்லாக அமைய அதிகமான வாய்ப்புக்கள் உள்ளன.

மேலும், இலங்கையில், இங்கிலாந்து போன்று நிறுவனங்களுக்கு குழு வரிவிதிப்பு முறை இல்லை. ஒவ்வொரு நிறுவனங்கள் மற்றும் குழுமங்களில் இருந்து தனித்தனியாக வரி அறவிடப்படுகின்றது. அரசாங்கத்தின் இவ் விசேட ஆதாய வரியால் மிகவும் பாதிக்கப்பட உள்ள துறையாக, நிதி மற்றும் வங்கித் துறையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் குழுமங்கள் இருக்கும். ஏனெனில், பின்னோக்கிய வரிகள் நிதி மற்றும் வங்கித் துறை நிறுவனங்களின் செயற்பாட்டு மூலதனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும், இந்த நிறுவனங்கள் ஏற்கெனவே நிதி சேவைகளுக்கான பெறுமதி சேர் வரிக்கு (Financial Services VAT) உட்பட்டவை. இலங்கை, ஒருவேளை அத்தகைய விசேட ஆதாய வரியை இந்த நிதி மற்றும் வங்கித் துறை நிறுவனங்களின் மீது விதித்தால், மேலதிகமாக 40சதவீதத்தை நிதி மற்றும் வங்கித் துறை மீது வரி விதிக்கும் நாடு என்ற பெருமையை இலங்கை பெறும். இலங்கையில் குழு வரிவிதிப்பு முறை இல்லாததால் நிறுவனங்கள் மற்றும் குழுமங்களின் வரி விதிப்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகளின் பணிகள் மேலும் சிக்கலானதாகவும் மற்றும் அதிக வரிச் சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும்.

பின்னோக்கிய வருமானவரித் திட்டத்தின் தாக்கம்

இந்த பின்னோக்கிய வருமானவரியானது குறுகிய கால முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும் என்று எந்த சந்தேகமும் இல்லை. இந்த விசேட ஆதாய வரி அறிவிப்பால் கடந்த ஜனவரி மாதம் முதல் கொழும்பு பங்கு சந்தை 180 பில்லியன் ரூபாய்களுக்கு மேலதிகமான சந்தை மூலதனத்தை இழந்துள்ளது. எனினும், இந்த விசேட ஆதாய வரியின் நோக்கம் அரசு குறுகிய கால வருவாய்த் தேவைகளைப் பூர்த்தி செய்ய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ் வரியானது, ஒரு தடவை மாத்திரம் அறவிடப்படும் வரியாகும். இது, நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு எதுவித பாரிய தாக்கங்களையும் கொள்கை முரண்பாடுகளையும் உண்டாக்கமாட்டாது. ஆனால், குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு பங்குதாரர்களின் வருமானத்தின் மீது ஓர் அபராதமாக காணப்படும்.

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதுகாக்க நாட்டில் செல்வந்தர்கள் மீது கூடுதல் வரிகளை சுமத்தும் திட்டமானது ஒரு புதிய விடயம் அல்ல. பல நேரங்களில் உயர்ந்த வரி விதிப்பின் நோக்கங்கள் மாறுபட்டவையாகக் காணப்படுகின்றன. சிலர் தங்களின் மூதாதைகளின் பாரம்பரியச் சொத்துக்களில் மூலம் செல்வந்தர்கள் ஆவர்கள் மற்றும் சிலர் சமீப காலங்களில் தொழில்நுட்ப முயற்சிகள் மூலமாக செல்வம் திரட்டினர், ஏனையோர் கடந்த அரசாங்க ஆதரவுடன் தங்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் ஏகப்பட்ட சொத்துக்களைப் பெருக்கினர். இவ் வரி விதிப்பானது கடந்த அரசாங்க ஆதரவுடன் சொத்துகளைப் பெருக்கியவர்களை நோக்கியதாக உள்ளது. எனினும் இவ் வகையான வரிகள் அறவிடப்படும் போது இதனால் எழுகின்ற பொருளாதார மற்றும் சமூக தாக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறுதியாக, தற்காலிகமாக நிறுவனங்கள் மற்றும் குழுமங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. ஆனால், வரிவிதிப்பை சம நிலையான முறையில் பயன்படுத்த வேண்டும்.

உதாரணமாக நிறுவனங்களின் இலாபத்தில் விசேட ஆதாய வரியை விதிக்கும் போது மொத்த இலாபத்தின் மீது விதிக்காமல் கூடுதல்முறை லாபத்தின் மீது (incremental profit) விதித்தால் அது நியாயமானதாக இருக்கும். ஆனால், தற்போது பிரேரிக்கப்பட்ட விசேட ஆதாய வரியானது மொத்த இலாபம் மீது விதிக்கப்படவுள்ளது. நிறுவனங்கள் மற்றும் குழுமங்கள் வரிக்கு முந்தைய இலாபமாக 2 பில்லியன் ரூபாய்களுக்கு குறைவாக பதிவு செய்தால் விசேட ஆதாய வரியை செலுத்த வேண்டியதில்லை. ஆனால் நிறுவனங்கள் மற்றும் குழுமங்கள் வரிக்கு முந்தைய இலாபமாக 2 பில்லியன் ரூபாய்களுக்கு மேலதிகமாக பதிவு செய்தால் வரி வருமானமாக வரிக்கு முந்தைய இலாபத்தில் 25 சதவீத்ததை செலுத்த வேண்டும். மேலும் கூடுதலாக, இரட்டை வருமான வரிவிதிப்பு தவிர்க்கப்பட வேண்டும்.
www.tamilmirror.lk/158113
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2015/11/blog-post.html"

No comments: