Friday 13 November 2015

இலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை

அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. 


வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprises (SMEs) இலங்கை அரசாங்கத்தின் முழுமொத்த குறிக்கோள்களினுள் முக்கியமானதொரு மூலோபாயத் துறையாக இணக்காணப்பட்டுள்ளதோடு, அனைத்து மக்களையும் உள்ளீர்க்கக்கூடியதான பொருளாதார வளர்ச்சி, பிரதேச அபிவிருத்தி, தொழில் உருவாக்கம் மற்றும் வறுமைத்தணிப்பு ஆகியவற்றுக்கான மாற்றத்தின் இயக்கசக்தியாக கருதப்படுகின்றது. பின்னடைவான பிரதேசங்களை எழுச்சி பெற்று வரும் சுபீட்சமான பிரதேசங்களாக மாற்றுவதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் பங்களிப்புச்செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மொத்த தொழில் முயற்சிகளின் எண்ணிக்கையில் 75% ஆகுமென்பதாலும்,தொழில் வாய்ப்புகளில் 45% ஐ வழங்குகின்றமையாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52% க்கு பங்களிப்புச் செய்கின்றமையாலும், இலங்கை அரசாங்கம் இதனை பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதுகின்றது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் துறையானது விரிந்ததொரு வீச்சிடையினுள் முற்றிலும் நியாயமான அபிவிருத்தி மேம்பாட்டை ஊக்குவிப்பதோடு இது இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்பதற்கு பெண்களுக்கும் இளைஞர், யுவதிகளுக்கும் வாய்ப்பேற்படுத்திக்கொடுக்கின்றது. 

உலகமயமாக்கல் போக்கைத் தொடர்ந்து, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் துறையானது, வெறுமனே 'பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்புக்கான' துறையாகவன்றி, அதனைவிட முக்கியமான வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான இயக்க சக்தியாகவே கருதப்படுகின்றது. ஆதலால் தோன்றுகின்ற சவால்களை எதிர்கொள்ளும் பொருட்டு இத்துறையின் தேசிய மற்றும் சர்வதேச போட்டி நிலையை வளர்த்து அதனை விருத்தியடைகின்ற துறையாக அபிவிருத்தி செய்தல் முக்கியமாகும் என இலங்கை அரசு கருதுகின்றது. 

இத்துறையின் இயல்பு மற்றும் அது எதிர்நோக்குகின்ற சவால்களைக் கவனத்திற்கொள்கின்ற போது இத்துறை இந்நாட்டின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டு அதனை மேம்படுத்தல் மற்றும் வலுப்படுத்துவதற்கு அரச தலையீட்டில் உதவிப்பொறி முறையோன்றை உருவாக்குதல் முக்கியமாகும். மேற்படி சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக்க கொள்கை வரைச்சட்டம் உயர் உள்ளார்ந்த ஆற்றலைக்கொண்ட, எதிர்பார்ப்புக்களை வைத்திருக்கக்கூடியதான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதையும், இன்றைய உலகமயமாக்கலுக்குள்ளான பொருளாதாரத்தினுள் அவை தனது முழுமையான உள்ளார்ந்த ஆற்றலை அடையப்பெறுவதற்கு வாய்ப்பேற்படுத்திக்கொடுப்பதையும் இலக்காகக்கொண்டுள்ளது.மேற்படி கொள்கை வரைச்சட்டமானது சிறியதொழில் முயற்சிகளை நடுத்தர அளவிலானதாகவும், நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை பாரிய அளவிலான தொழில் முயற்சிகளாகவும், பாரிய அளவிலான தொழில் முயற்சிகளை உலகளாவிய ரீதியில் போட்டிகரமான தொழில் முயற்சிகளாகவும் வளர்ச்சியடைவதற்கு உதவி வழங்குகின்றது. 

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் பற்றிய வரைவிலக்கணம் 

 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி என்ற சொல் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும். பல்வேறான நாடுகளும் தமது அபிவிருத்தி மட்டத்தை அடிப்படையாகக்கொண்டு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் பொருட்டு ஒவ்வொன்றும் மாற்றமான வரைவிலக்கணங்களைப் பயன்படுத்துகின்றன. பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற அளவீட்டு அலகாகக் காணப்படுவது மொத்த ஊழியர் எண்ணிக்கை, வருடாந்த மொத்தப்புரள்வு மற்றும் முழுமொத்த முதலீடு என்பனவாகும். இலங்கையின் சூழமைவினுள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக் கொள்கை வரைச்சட்டத்தின் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு மொத்த ஊழியர் எண்ணிக்கை மற்றும் வருடாந்த மொத்தப் புரள்வை அடிப்படையாக கொண்டு வரைவிலக்கணமளிப்படுகிறது. 

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறையானது 300 க்கு குறைவான ஊழியர் எண்ணிக்கையை சேவையில் ஈடுபடுத்துகின்ற மொத்தப்புரள்வு ரூபாய் 750 மில்லியனைத் தாண்டாத தொழில் முயற்சிகளைக் கொண்டதாகும். இச்சூழமைவினுள், கொள்கை சார்ந்த நடவடிக்கைகள் பற்றியதாயின் நுண்பாக தொழில் முயற்சிகளும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி வகையாக கருதப்படும்.

 வரைவிலக்கணத்தைப் பொறுத்தவரை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு வரைவிலக்கணமளிக்கின்ற போது இந்த இரண்டு அளவுகோள்களும் கவனத்திற்கொள்ளப்படும்.ஏதேனுமொரு தொழில் முயற்சி ஒரு வகையவிட பலவற்றில் சேர்கின்ற போது, தொழில் புரிவோர் மட்டுமே தீர்க்கமான காரணியாக அமைதல் வேண்டும். இந்த உயர் எல்லை தனித்தொழில் முயற்சிகளுக்கு மாத்திரமே ஏற்புடையதாக இருக்கும். பாரிய குழுமமொன்றின் பகுதியொன்றாக உள்ள நிறுவனத்தைப் பொறுத்தவரை அந்தக் குழுமத்தின் ஊழியர் எண்ணிக்கை மற்றும் மொத்தப்புரள்வையும் சேர்த்துக்கொள்ளல் அவசியமாகலாம். 

பாரிய கம்பனிகளின் இரண்டாம் நிலைத் தகவுகள் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாகக் கருதப்படுவதில்லை. எவ்வாறாயினும் மேற்கூறப்பட்ட வரையறையினுள் வருகின்ற முழுக் குழுமத்தினதும் மொத்தப் புரள்வு மற்றும் ஊழியர் எண்ணிக்கை என்பன இதில் சேர்க்கப்படமாட்டாது. 

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக்கு வரைவிலக்கணமளிப்பதன் நோக்கம் யாதெனில், கொள்கைகளை இலக்கிடுவதற்கும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் பற்றிய தேசிய புள்ளிவிவரத் தரவுகளை வழங்குவதற்குமான மூலோபாயமொன்றைப் பெற்றுக்கொடுப்பதாகும். இந்த வரைவிலக்கணம் ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒரு தடவை ஆராயப்பட்டு நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்திக்குத் தேவையானவாறு மாற்றப்படும். 

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் கொள்கையின் குறிக்கோள் 

 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக் கொள்கை வரைச்சட்டகமானது புதிய சிறிய மற்றும் நடுத்தர அளவலான தொழில் முயற்சிகளுக்கு உதவுவதற்கும். தற்போதுள்ள தொழில் முயற்சிகளை வலுப்படுத்துவதற்கும், வெற்றிகரமாக நிலைத்திருக்கூடிய உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்ட ஆயினும் கஷ்டமான நிலைமையில் உள்ள அளவிலான தொழில் முயற்சிகளுக்கான சீராக்கல் நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் செயலாற்றுகின்றது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக் கொள்கைகள் பின்வரும் துறைகள் தொடர்பில் கவனத்தைச் செலுத்தும். 

உயர் உள்ளார்ந்த ஆற்றலுடன் கூடிய நிலையானதும் பயனுறுதியானதுமான துறைகளை மேம்படுத்தல். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பில் குழுக்களின் அணு முறையின் மீது கவனம் செலுத்தல். குழுக்கள் முறையின் கீழ் உள்ளீடுகளை வழங்குதல் முதல் பதனில் ஊடாக ஏற்றுமதி வரை ஒட்டுமொத்த பெறுமதித் தொடருக்கு உதவியளித்தல் மற்றும் ஊக்குவிப்பளித்தல் நடைபெறும். உயர் பெறுமதி சேர்ப்புடன் கூடியதாக தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல் மற்றும் உள்நாட்டு மூலப்பொருட்களை (உற்பத்திக்காரணிச் சொத்து என்பதன் காரணத்தினால் அதிக ஒப்பீட்டு அனுகூலத்தை வழங்குவதால் அவற்றை) பயன்படுத்துகின்ற தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல். 

ஏற்றுமதித் திசை முகப்படுத்தப்பட்ட அல்லது ஏற்றுமதிப் பதிலீட்டுத் தொழில் முயற்சிகள் மற்றும் கைத்தொழில்களை ஆர்வமூட்டுதல் மற்றும் ஊக்குவித்தல். 

தொழில் உருவாக்கம் மற்றும் தொழில் வாய்ப்புகளிள் உருவாகத்திற்கு வசதி ஏற்படுத்தும் பொருட்டு உயர் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்ட வெளிப்பாய்ச்சல் விளைவுகளுடன் கூடிய முக்கியமான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித் துறைகளை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்தல். 

நகர-கிராமிய சம நிலையின்மையைக் குறைக்கும் பொருட்டு பின்னடைவான பிரதேசங்களில் கைத்தொழில்களை மேம்படுத்தல் மற்றும் மீளத்தாபித்தல். 

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் இயல்பை வெறுமனே வர்த்தக, வாணிப அலுவல்கள் மூலமன்றி உயர் பெறுமதியை சேர்த்தல், புத்தாக்கம் மற்றும் தகுந்ந நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதன் அடிப்படையிலான உற்பத்திகள் மற்றும் கைத்தொழில்களின்பால் மாற்றமடையச் செய்தல். 

அனைவரையும் உள்ளடக்குகின்றதான பொருளாதார அபிவிருத்தியை அதிகரிக்கச் செய்யும் பொருட்டும் அதன் மூலம் மிகவும் சிறந்த தொழில் நிலை மற்றும் உயர் வருமானத்துக்கான வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறையை வலுப்படுத்தல். 

இலங்கை பூராவும் பிரதேச ரீதியில் சமநிலையான பொருளாதார வளர்ச்சியை அடையப்பெறுதல். பசுமைத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தல் உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலும் வளங்கள் பயன்படுத்தப்படுதலின் வினைத்திறனை மேம்படுத்தல். 

அதேபோன்று சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக் கொள்கை வரைச்சட்டகமானது தொழில் முயற்சிக் கிராமம், கைப்பணிக் கைத்தொழில் கிராமம்,தொழில்நுட்ப உற்பத்தி கிராமம் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக் கைத்தொழில் பூங்கா, நகரம், பிரதேசத்தை பலப்படுத்துவதன் மூலம் இயற்கை மூலதனம், பசுமை வளர்ச்சி, தொழில் முயற்சியாளர் அபிவிருத்தி, பெண் தொழில் முயற்சியாளர், கலைநுட்பத்துறை மற்றும் பயனுறுதியான கைத்தொழில் குழுக்களைப் பேணிவருதல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தும். 

உயர் உள்ளார்ந்த ஆற்றலுடன் கூடிய பயனுறுதியான குழுக்கள் 

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு உதவி வழங்குகின்ற மற்றும் ஊக்குவிக்கின்ற பணியின் பொருட்டு உயர் உள்ளார்ந்த ஆற்றலை எதிர்பார்க்கக்கூடிய குழுக்கள் இனங்காணப்பட்டுள்ளன. பயனுறுதியான குழுக்களைத் தீர்மானிக்கின்ற போது பெறுமதி சேர்த்தல், உள்நாட்டு மூலப்பொருட்களைப் பயன்படுத்தல். முன்னோக்கிய மற்றும் பிந்திய தொடர்புகள், உயர்ந்தளவு வெளிப்பாய்ச்சல் விளைவுகள், தொழில்நுட்ப இயக்க சக்தியுடன் கூடிய உற்பத்திகள் மற்றும் தொழில் உருவாக்க தோற்றப்பாடுகள் ஆகிய அளவுகோள்கள் கவனத்திற் கொள்ளப்படும்.

http://www.tamilmirror.lk/158585
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2015/11/blog-post_13.html"

Wednesday 4 November 2015

விசேட ஆதாய வரி ஏன் தவிர்க்கப்பட வேண்டும்


அச்சுதன் ஸ்ரீரங்கன்

நிதிய முகாமையாளர் (Fund Manager) GIH Capital Ltd

கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற அரசாங்கத்தின் இடைக்கால வரவு-செலவுதிட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்ட விசேட ஆதாய வரி (Super Gains Tax) ஆனது, இலங்கையின் வர்த்தக சமூகத்தில் உள்ள ஒரு சில நிறுவனங்கள் மற்றும் குழுமங்களின் வளர்ச்சி நிலையை வெகுவாகப் பாதிப்படையச் செய்யும். இவ் விசேட ஆதாய வரியானது ஒரு பின்னோக்கிய வரி (Retrospective Taxes) திட்டமாகும். முந்தைய அரசின் ஆதரவுடன் கடந்த பல ஆண்டுகளாக இலாபம் சம்பாதித்த சில நிறுவனங்கள் மற்றும் குழுமங்களை நோக்கியதாக இவ் விசேட ஆதாய வரியானது காணப்படுகின்றது.

இந்த வகையான விசேட ஆதாய வரிகள், ஒரு புதிய பரிணாமமான வரிகள் அல்ல. ஏனைய பல நாடுகளில் ஏற்கெனவே இவை பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக 1997ஆம் ஆண்டில் பிரிட்டனில் மீண்டும் ஆட்சிக்கு வந்த தொழிற்கட்சி, முன்னைய பழமைவாதிகள் கட்சியின் ஆட்சியின் கீழ் தனியார் மயமாக்கப்பட்டு, மிகையான இலாபங்களை ஈட்டிய நிறுவனங்கள் மீது, 23சதவீத மிகை ஆதாய வரியை விதித்தது.

ஆய்வாளர்களின் கருத்துப்படி, மிகையான இலாபங்கள் ஈட்டுவதாக அரசால் குறிப்பிட்டுள்ள அந்தச் சில நிறுவனங்கள் மற்றும் குழுமங்கள் இன்னும் உத்தேச வரைவில் உள்ளடக்கப்படவில்லை. ஆனால், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பல உயர்மட்ட நிறுவனங்களின் கடந்த கால இலாபங்கள் மீது திணிக்கப்பட உள்ள விசேட ஆதாய வரியானது, அவ் நிறுவனங்களின் குறுகிய கால பணப்புழக்கத்தில் ஒரு பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தவல்லது.

இந்த புதிய வரித் திட்டமானது, 2013-2014ஆம் ஆண்டுகளில் வரிக்கு முந்தைய 2,000 மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட இலாபத்தினைச் சம்பாதித்த ஏதேனும் நிறுவனங்கள் மற்றும் குழுமங்களின் இலாபத்தில் 25 சதவீதத்தை விசேட ஆதாய வரியாக (Super Gains Tax) செலுத்துவதற்கு கடப்பாடுடையவராவார். ஏற்கெனவே, தங்கள் இலாபத்துக்கு வரி செலுத்திய நிறுவனங்கள் மற்றும் குழுமங்களின் நிதி அறிக்கைகள் மீது இத்தகைய விசேட வரிகள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். திட்டமிடப்பட்டுள்ள விசேட ஆதாய

வரியானது, ஒரு பின்னோக்கிய வரி குறிப்பிடப்படும் போது, இதன் சுமைகளை இந்த நிறுவனங்கள் தற்போதைய பங்குதாரர்கள் ஏற்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

இலங்கை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH), இலங்கை டிஸ்டிலரீஸ் கம்பனி (DCSL) , சிலோன் டொபாக்கோ கம்பனி (CTC), கார்சன்ஸ், புகிட் டரா, எயிற்கின் ஸ்பென்ஸ், நெஸ்லே லங்கா (Nestle) , அக்சஸ் என்ஜினியரிங், இலங்கை இந்திய எண்ணெய் (கூட்டுத்தாபனம்) (LIOC) , செவ்ரோன் லுபிரிகன்ஸ், ஆசிய ஹோட்டல், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டோக்கியோ சீமெந்து ஆகியவை இவ் விசேட ஆதாய வரி விதிப்பில் அடங்குகின்றன. மேலும் கொமர்ஷியல் வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி, சம்பத் வங்கி, சென்ரல் பைனான்ஸ், பீபள்ஸ் லீசிங் அன்ட் பைனான்ஸ், செலிங்கோ இன்சூரன்ஸ், செலான் வங்கி ஆகிய நிதி மற்றும் வங்கித் துறை சார்ந்த நிறுவனங்களும் அடங்க வாய்ப்புள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் பெருநிறுவன வரியாக (Corporate Taxes) 28 சதவீதத்தை ஏற்கெனவே செலுத்தியுள்ளன. அதற்கு மேலதிகமாக அறவிடப்படவுள்ள விசேட ஆதாய வரி 25 சதவீதத்தையும் சேர்த்து மொத்தமாக, 53 சதவீதத்தைத் தங்களின் இலாபத்தில் வரியாக நிறுவனங்கள், அரசாங்கத்துக்குச் செலுத்த நேரிடும். இவ் அதிகரிப்பானது தற்போதைய ஆசிய பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான குறைந்த வரி விகிதங்கள் கொண்ட நாடுகளில் ஒன்றாக முதலீட்டாளர்களுக்கு கருதப்படுகின்ற இலங்கையின் புதிய முதலீட்டு திட்டங்களுக்கு தடைக்கல்லாக அமைய அதிகமான வாய்ப்புக்கள் உள்ளன.

மேலும், இலங்கையில், இங்கிலாந்து போன்று நிறுவனங்களுக்கு குழு வரிவிதிப்பு முறை இல்லை. ஒவ்வொரு நிறுவனங்கள் மற்றும் குழுமங்களில் இருந்து தனித்தனியாக வரி அறவிடப்படுகின்றது. அரசாங்கத்தின் இவ் விசேட ஆதாய வரியால் மிகவும் பாதிக்கப்பட உள்ள துறையாக, நிதி மற்றும் வங்கித் துறையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் குழுமங்கள் இருக்கும். ஏனெனில், பின்னோக்கிய வரிகள் நிதி மற்றும் வங்கித் துறை நிறுவனங்களின் செயற்பாட்டு மூலதனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும், இந்த நிறுவனங்கள் ஏற்கெனவே நிதி சேவைகளுக்கான பெறுமதி சேர் வரிக்கு (Financial Services VAT) உட்பட்டவை. இலங்கை, ஒருவேளை அத்தகைய விசேட ஆதாய வரியை இந்த நிதி மற்றும் வங்கித் துறை நிறுவனங்களின் மீது விதித்தால், மேலதிகமாக 40சதவீதத்தை நிதி மற்றும் வங்கித் துறை மீது வரி விதிக்கும் நாடு என்ற பெருமையை இலங்கை பெறும். இலங்கையில் குழு வரிவிதிப்பு முறை இல்லாததால் நிறுவனங்கள் மற்றும் குழுமங்களின் வரி விதிப்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகளின் பணிகள் மேலும் சிக்கலானதாகவும் மற்றும் அதிக வரிச் சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும்.

பின்னோக்கிய வருமானவரித் திட்டத்தின் தாக்கம்

இந்த பின்னோக்கிய வருமானவரியானது குறுகிய கால முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும் என்று எந்த சந்தேகமும் இல்லை. இந்த விசேட ஆதாய வரி அறிவிப்பால் கடந்த ஜனவரி மாதம் முதல் கொழும்பு பங்கு சந்தை 180 பில்லியன் ரூபாய்களுக்கு மேலதிகமான சந்தை மூலதனத்தை இழந்துள்ளது. எனினும், இந்த விசேட ஆதாய வரியின் நோக்கம் அரசு குறுகிய கால வருவாய்த் தேவைகளைப் பூர்த்தி செய்ய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ் வரியானது, ஒரு தடவை மாத்திரம் அறவிடப்படும் வரியாகும். இது, நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு எதுவித பாரிய தாக்கங்களையும் கொள்கை முரண்பாடுகளையும் உண்டாக்கமாட்டாது. ஆனால், குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு பங்குதாரர்களின் வருமானத்தின் மீது ஓர் அபராதமாக காணப்படும்.

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதுகாக்க நாட்டில் செல்வந்தர்கள் மீது கூடுதல் வரிகளை சுமத்தும் திட்டமானது ஒரு புதிய விடயம் அல்ல. பல நேரங்களில் உயர்ந்த வரி விதிப்பின் நோக்கங்கள் மாறுபட்டவையாகக் காணப்படுகின்றன. சிலர் தங்களின் மூதாதைகளின் பாரம்பரியச் சொத்துக்களில் மூலம் செல்வந்தர்கள் ஆவர்கள் மற்றும் சிலர் சமீப காலங்களில் தொழில்நுட்ப முயற்சிகள் மூலமாக செல்வம் திரட்டினர், ஏனையோர் கடந்த அரசாங்க ஆதரவுடன் தங்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் ஏகப்பட்ட சொத்துக்களைப் பெருக்கினர். இவ் வரி விதிப்பானது கடந்த அரசாங்க ஆதரவுடன் சொத்துகளைப் பெருக்கியவர்களை நோக்கியதாக உள்ளது. எனினும் இவ் வகையான வரிகள் அறவிடப்படும் போது இதனால் எழுகின்ற பொருளாதார மற்றும் சமூக தாக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறுதியாக, தற்காலிகமாக நிறுவனங்கள் மற்றும் குழுமங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. ஆனால், வரிவிதிப்பை சம நிலையான முறையில் பயன்படுத்த வேண்டும்.

உதாரணமாக நிறுவனங்களின் இலாபத்தில் விசேட ஆதாய வரியை விதிக்கும் போது மொத்த இலாபத்தின் மீது விதிக்காமல் கூடுதல்முறை லாபத்தின் மீது (incremental profit) விதித்தால் அது நியாயமானதாக இருக்கும். ஆனால், தற்போது பிரேரிக்கப்பட்ட விசேட ஆதாய வரியானது மொத்த இலாபம் மீது விதிக்கப்படவுள்ளது. நிறுவனங்கள் மற்றும் குழுமங்கள் வரிக்கு முந்தைய இலாபமாக 2 பில்லியன் ரூபாய்களுக்கு குறைவாக பதிவு செய்தால் விசேட ஆதாய வரியை செலுத்த வேண்டியதில்லை. ஆனால் நிறுவனங்கள் மற்றும் குழுமங்கள் வரிக்கு முந்தைய இலாபமாக 2 பில்லியன் ரூபாய்களுக்கு மேலதிகமாக பதிவு செய்தால் வரி வருமானமாக வரிக்கு முந்தைய இலாபத்தில் 25 சதவீத்ததை செலுத்த வேண்டும். மேலும் கூடுதலாக, இரட்டை வருமான வரிவிதிப்பு தவிர்க்கப்பட வேண்டும்.
www.tamilmirror.lk/158113
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2015/11/blog-post.html"

Friday 30 October 2015

2016ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம்: ஓர் அலசல்

-அச்சுதன் ஸ்ரீரங்கன்

கடந்த வாரம், இலங்கையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தினை (Appropriation Bill) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

வரவு-செலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் எனப்படுவது, குறித்த நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்தகைய சேவையின் நோக்கத்துக்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும் அந்நிதியாண்டின்போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதியேற்பாடுகளைச் செய்வதற்கும் அத்தகைய செயற்பாடுகளுக்கான செலவினத்துக்கு அந்நிதியாண்டின்போது தேவைப்படும் பணங்களைத் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்துக்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ள அல்லது அதனிடமுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணமாகக் கொடுப்பதை இயலச் செய்வதற்கும், திரட்டு நிதியத்துக்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலமாகும்.

2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட ஏற்பாடுகள், 2016- 2018 நடுத்தர காலத்தில் கிடைப்பனவிலுள்ள மொத்த வளங்களை கருத்திற் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 2016ஆம் ஆண்டுக்கான மொத்த செலவீனம் 3,138 பில்லியன் ரூபாயாகும். அதேபோன்று நடைமுறையிலுள்ள அறவீட்டுக் கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு மானியங்கள் உள்ளடங்களான வருமானம் ஏறக்குறைய 1,789 பில்லியன்களாகும்.

அரசாங்கத்தின் மொத்த செலவில் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூலம் மதிப்பிடப்பட்ட செலவு 1,941 பில்லியன் ரூபாய், இவற்றில் 1,314 பில்லியன் ரூபாய் மீண்டுவரும் செலவினமும் 627 பில்லியன் ரூபாய் மூலதன செலவுகளாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிகமாக சிறப்பு சட்டங்களின் கீழ் பொதுப்படுகடன் மற்றும் கடன் மீள் செலுத்துகைக்கான செலவுகள், விதவைகளுக்கான ஓய்வூதியம் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக்கைகளுக்காக 1,191 பில்லியன் ரூபாய் செலவுகளாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு மொத்தமாக 306.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

257.7 பில்லியன் ரூபாய் மீண்டுவரும் செலவினமாகவும் 48.9 பில்லியன் ரூபாய் மூலதன செலவாகவும் காணப்படுகின்றது. 2015இல் பாதுகாப்பு அமைச்சு நகர அபிவிருத்தி அமைச்சுடன் சேர்க்கப்பட்டிருந்த போது மொத்த ஒதுக்கீடு 285 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 85 சதவீதம் இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கடலோர பாதுகாப்புத் திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகம் செயற்பாட்டு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி 2.3 பில்லியன் ரூபாய், 2015 வரவு- செலவுத்திட்ட ஒதுக்கீட்டில் 9.6 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டது. கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடு, முன்னைய ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டின் வரவு- செலவுத் திட்டத்தில் 47.6 பில்லியன் ரூபாயாக காணப்பட்ட ஒதுக்கிடு 2016ஆம் ஆண்டுக்கு 185.9 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மற்றைய பெரிய ஒதுக்கீடுகளாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கு 237 பில்லியன் ரூபாயும், பல்கலைக்கழகக் கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சுக்கு 171 பில்லியன் ரூபாயும் பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைச்சுக்கு 156 பில்லியன் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சுக்கு  107 பில்லியன் ரூபாயும் மற்றும் சுகாதாரம் ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சுக்கு 174 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவு-செலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கிகாரம் அளித்தது, இவ் சட்டமூலம் ஒக்டோபர் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

நவம்பர் 20ஆம் திகதி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவால் வரவு- செலவுத் திட்டத்துக்கான இரண்டாம் மதிப்பீடு செய்யப்படும்.


submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2015/10/2016.html"