Wednesday, 19 May 2010

* இந்தியா போகிறார் வார்ன் பப்ட் (Warren Buffet) ... முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு!

உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வார்ன் பப்ட் (Warren Buffet) இந்தியாவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார்.

உலகின் பெரிய பணக்காரர்களில் முக்கியமானவர் வார்ன் பப்ட். பெரிய முதலீட்டாளர் இவர். பெர்க்சயர் ஹத்வே (Berkshire Hathaway) என்ற நிறுவனத்தின் தலைவர். இந்த நிறுவனம்தான் கோக கோலா கம்பெனியில் கணிசமான அளவு பங்குகளைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவுக்கு வெளியே வார்ன் பப்ட் முதலீடு செய்திருப்பது மிகக் குறைவுதான். அப்படிப்பட்டவர் முதல் முறையாக இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து வருவதாக பெர்க்ஷையர் ஹதாவேயின் செய்திக் குறிப்பு கூறுகிறது. இதுகுறித்து தனது நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக வார்ன் பப்ட்யும் உறுதிப்படுத்தியுள்ளார்.

வரும் மார்ச் மாதம் இந்தியாவுக்கு வருகிறார் வார்ன் பப்ட். இதுகுறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது செய்தியில், "முதல் முறையாக இந்தியாவில் முதலீடு செய்ய வார்ன் பப்ட் திட்டமிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளது இந்தியா. இந்த சூழலில் எந்த அளவு முதலீட்டை இந்தியாவும் அமெரிக்காவும் அனுமதிக்கும் என்று ஆராய்ந்து வருகிறார்..." என்று குறிப்பிட்டுள்ளது.

ஆசியாவில் மூன்று நாடுகளில் மட்டுமே வார்ன் பப்ட் முதலீடு செய்துள்ளார். தென் கொரியாவின் போஸ்கோ, சீனாவின் பிட் மற்றும் இஸ்ரேலில் மட்டுமே இவரது முதலீடுகள் உள்ளன.

இந்தியாவில் இன்ஸுரன்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்ய பெர்க்சயர் ஹத்வே விரும்புவதாக பப்ட் தெரிவித்துள்ளார்.

பெர்க்சயர் ஹத்வே மறு காப்பீட்டு வர்த்தகத்தை தலைமையேற்று நடத்துபவர் அஜீத் ஜெயின் என்ற இந்தியர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/warren-buffet.html"

Monday, 17 May 2010

* ஒரே மாதத்தில் அமெரிக்காவில் 290,000 வேலைவாய்ப்புக்கள்

வேலைவாய்ப்பு விஷயத்தில் மீண்டும் தன் பழைய பரபரப்புக்குத் திரும்புகிறது அமெரிக்கா .

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டுமே 290,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

கடந்த நான்காண்டுகளில் ஆறுதலளிக்கும் முதல் செய்தி இதுவே என அமெரிக்கர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம் வேலையின்மையின் அளவும் இரட்டை இலக்கத்திலிருந்து 9.9 சதவீதம் என ஒற்றை இலக்கத்துக்கு இறங்கி வந்துள்ளது.

உற்பத்தித் துறை, மருத்துவத் துறை என பல துறைகளில் இதுவரை 805,000 பேர் மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளனர். கடந்த பிப்ரவரியில் 120,000 பேருக்கு வேலை அளிக்கப்பட்டது.

விரைவில் அமெரிக்க காங்கிரஸுக்கு தேர்தல் வரவிருப்பதால், வரும் மாதங்களில் அதிக அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் குறியாக உள்ளது ஒபாமா நிர்வாகம்.

அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பினாலும், நிறுவனங்கள் வேலைக்கு ஆளெடுப்பதில் தயக்கம் காட்டின. இப்போது நிலைமை நம்பிக்கை தரும் அளவுக்கு மேம்பட்டுள்ளதால், மீண்டும் அதிக அளவு ஆட்களை எடுக்க ஆரம்பித்துள்ளன. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/290000.html"

Wednesday, 12 May 2010

* பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்களின் 20 நாள் 'மெகா வேலை நிறுத்தம்'

பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள் 20 நாட்கள் மெகா ஸ்ட்ரைக் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த வேலை நிறுத்தம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு குறித்து நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் சில வாரங்களுக்கு முன் இருமுறை வேலை நிறுத்தம் நடத்தினர்.இதில் பெரும் பாதிப்புக்கு உள்ளானது பிரிட்டிஷ் ஏர்வேஸ்.

முன்பு நடந்த வேலை நிறுத்ததில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட விமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ். இதனை கைவிட வேண்டும் என்று கோரியும், நிறுத்தப்பட்டுள்ள பயணச் சலுகை உள்ளிட்ட சம்பள உயர்வுகளை உடனே தரக் கோரியும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்களின் அமைப்பான யுனைட் கோரியுள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸில் உள்ள 12000 விமான ஊழியர்களில் 90 சதவிகிதத்தினர் இந்த யுனைட்டின் அங்கத்தினர்களே.


20 நாள் ஸ்ட்ரைக்குக்கான தேதிகளையும் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

மே 18-22, மே 24-28, மே 30-ஜூன் 3 மற்றும் ஜூன் 5-9 என நான்கு கட்டங்களாக இந்த ஸ்ட்ரைக்கை நடத்த உள்ளனர் ஊழியர்கள்.

ஏற்கெனவே ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ். இப்போது இந்த மெகா வேலை நிறுத்தம் நடந்தால், நஷ்டம் தாங்க முடியாத அளவுக்குப் போய்விடும் என்பதால், பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது நிர்வாகம். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/20.html"