Monday, 12 October 2015

இலங்கை நிதிப்பற்றாக்குறை: ஓர் அலசல்

-  அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager) GIH Capital Ltd.


ஒரு பொருளாதாரத்தில் மிகவும் தீர்க்கப்பட வேண்டியதும் கட்டுப்படுத்த வேண்டியதுமான பொருளாதார சிக்கல் நிதிப்பற்றாக்குறையாகும். அதிகரித்துச் செல்கின்ற பொதுப்படுகடன், வெளிநாட்டுக்கடன் மற்றும் வர்த்தகப் பற்றாக்குறை இடையிலான பிணைப்புக்கள் நிதிப்பற்றாக்குறையில் நெருங்கிய தாக்கங்களை செலுத்துகின்றன. நாட்டின் பொருளாதார உறுதிப்பாடு மற்றும் வளர்ச்சிக்கு, நிதிப்பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5சதவீதம் அல்லது அதற்குக் குறைவானதாகக் காணப்பட வேண்டும். 

பொருளாதாரப் பிரச்சினைகள் 

அதிகரித்துச் செல்கின்ற நிதிப்பற்றாக்குறையானது பொருளாதாரத்தின் மீது கடுமையான தாக்கமுடையதுமான விளைவுகளை உண்டாக்கவல்லது. அவற்றின் மூலம் பணவீக்க அழுத்தங்கள் மட்டுமல்லாது பொதுப்படுகடன், வெளிநாட்டுக்கடன் மற்றும் வர்த்தகப் பற்றாக்குறையிலும் தாக்கத்தை செலுத்தும். 

பாரிய நிதிப்பற்றாக்குறை காரணமாக எழுகின்ற பணவீக்க அழுத்தமானது, நேரடியாக மக்களின் வாழ்க்கைச் செலவில் அதிகரிப்பை ஏற்படுத்தும். இதன் மூலமாக குறைந்த ஊதியம் பெறுபவர்களும் நிலையான ஓய்வூதியம் பெறுபவர்களும் அதிகளவான சுமைகளை தாங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாவர். அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுகள், அதிக ஊதியங்களுக்கான கோரிக்கைகளுக்கு வழிகோலும். 

சம்பள அதிகரிப்பானது, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான உற்பத்திச் செலவில் அதிகரிப்பை ஏற்படுத்தி, சர்வதேச சந்தையில் உற்பத்தி செய்யும் நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கேள்வியை குறைத்து விடும். 

இதனால் மற்றைய நாடுகளுடன் போட்டி போட முடியாத நிலைக்கு தள்ளப்படும். இதன் மூலம் கிடைத்து வந்த ஏற்றுமதி வருமானம் குறைந்து நாட்டின் கட்டண இருப்பு நிலை மற்றும் வர்த்தக பற்றாக்குறைக்கு வழிகோலும்.  

இப்பற்றாக்குறைகளைக் குறைக்க மற்றைய பணவீக்கம் குறைந்த நாடுகளுடன் சர்வதேச சந்தையில் போட்டி போட ரூபாயை மதிப்பிறக்கம் செய்ய நேரிடும். இதன் மூலம் மீண்டும் பணவீக்கம் உயர்ந்து மக்களின் வாழ்க்கைச் செலவில் அதிகரித்த தாக்கத்தை செலுத்தும். 

கடந்த மாதம் இலங்கை மத்திய வங்கி நாணயத்தை மிதக்கவிட்டதால், ரூபாயின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக 4.5 சதவீதம் சரிந்தது. இலங்கை மத்திய வங்கி வட்டி விகிதங்களை கட்டுப்படுத்தத் தவறினால் அல்லது கணிசமான அளவு அந்நிய நேரடி முதலீடு கிடைக்கவில்லை என்றால், இலங்கை ரூபாய் குறுகிய காலத்தில் மேலும் வீழ்ச்சியடைவதையே சந்தை எதிர்பார்க்கிறது. 2015 ஜனவரி முதல், இலங்கை ரூபாய், டொலருக்கு எதிராக 7.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 

இலங்கையில் தொடர்ந்து காணப்படுகின்ற நிதிப்பற்றாக்குறையால் கடன்கள் மற்றும் கடன் மீள் செலுத்துகைக்கான செலவுகள் அதிகரித்துச் செல்கின்றன. 2014ஆம் ஆண்டில் மொத்தப் பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 75.5சதவீதம் இருந்தது. 

மேலும், 2015இல் அதிகரித்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களாலும் மந்தமான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியாலும் கடன் சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இலங்கை அரசின் மொத்த பொது கடன் இலங்கையின் மொத்த கடன் 8.2 ட்ரில்லியன் ரூபாய்களாக (58.7 பில்லியன் டொலர்) இதில் கிட்டத்தட்ட பாதி வெளிநாட்டுக் கடன்களாகும். இது நாட்டின் அந்நிய செலாவணி பிரச்சினைகளை உக்கிரமாக்கும். வர்த்தக பற்றாக்குறை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 4 பில்லியன் டொலர்களாக 15.6சதவீதம் அதிகரித்துள்ளது. 

2014ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 95சதவீதம் கடன்கள் மற்றும் கடன் மீள் செலுத்துகைக்கான செலவுகளாக செலுத்தப்பட்டது. ஆனால், 2013இல் அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 105 சதவீதம் கடன்கள் மற்றும் கடன் மீள் செலுத்துகைக்கான செலவுகளாக செலுத்தப்பட்டன. 

இதனை சமாளிக்க அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் உள்ளீர்க்கப்பட்டன. இதனால் பல முன்னுரிமையான பொது செலவீனங்கள் மற்றும் வளர்ச்சி செலவீனங்கள் குறைக்கப்பட்டன. 

நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைப்பது பொருளாதாரத்தின் கட்டாயமானதாக கருதப்பட்டது. ஆயினும், இலங்கையில் இதனை சமாளிக்கும் விகிதாசாரத்தின் அடிப்படையில் வருமான மற்றும் செலவு பக்கங்களுக்கான போதுமான நடவடிக்கைகள் இல்லை. ஒவ்வொரு வருடமும் நிர்ணயிக்கப்படுகின்ற வருடாந்த இலக்குகளும் அடையப்படுவதும் இல்லை. 2014ஆம் ஆண்டு 5.2சதவீதமாக நிர்ணயிக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறை இலக்கு வருட இறுதியில் 6சதவீதம் காணப்பட்டது.

 நிதிப்பற்றாக்குறை 2014 

இலங்கை மத்திய வங்கியின் 2014ஆம் ஆண்டு அறிக்கையின் படி, 'அரசாங்கம், 2013இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.9சதவீதம் இருந்த நிதிப்பற்றாக்குறை 2014இல் 5.2சதவீதம் ஆகக் குறைக்கவும், 2013இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 78.3சதவீதம்  இருந்த மொத்தப் பொதுப்படுகடனை 2014இல் 74.3சதவீதம் ஆகக் குறைக்க எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், 2014ஆம் ஆண்டு இலங்கையின் வரவு-செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6சதவீதம் ஆக காணப்பட்டது. இப்பற்றாக்குறைக்கான காரணங்களாக மீண்டுவரும் அரச செலவீனங்களும் அதிகரிக்காத அரச வருமானங்களும் வருமான பற்றாக்குறையை சமாளிக்க பெற்ற கடன்களும் மற்றும் மூலதன செலவுகள் குறைக்கப்பட்ட காரணத்தால் குறைந்த வரி வருமானங்களும் காணப்படுகின்றன. 

இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நாட்டின் அந்நிய செலாவணி நெருக்கடியை தவிர்ப்பதற்காக மேலதிகமாக 4 பில்லியன் டொலர் கடனை எதிர்பார்க்கின்றது. 2014ஆம் ஆண்டு வரவு - செலவுப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2 சதவீதமாகக் குறைக்கத் தவறியமைக்காக, 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதே கோரிக்கையை சர்வதேச நாணய நிதியம் முழுமையாக நிராகரித்தது. அரசாங்கம் இந்த ஆண்டுப்  பற்றாக்குறையை 4.4 சதவீதமாக கட்டுப்படுத்த வாக்குறுதி அளித்துள்ளது. 

2015ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், இந்த ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5சதவீதமும் அதற்கும் குறைந்த அளவில் பேணப்பட்டு வந்தது. ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் புதிய அறிக்கையின் படி, நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5சதவீதம் காணப்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. அரசாங்கம் புதிய வருமான மார்க்கங்களை கண்டறிந்து உடனடியாக வருமானத்தை அதிகரிக்கத் தவறினால் நிதிப்பற்றாக்குறை வெகுவாக அதிகரிக்கலாம். 

புதிய வரிகள் 

இலங்கை அரசாங்கம் வரி வருவாய்யை உயர்த்தும் நோக்கில் மாளிகை வரி (Mansion Tax) குடியகல்வு வரி (Migration Tax) மற்றும் 2013-2014 வரி வருடத்தில் 2,000 மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட இலாபத்தினை சம்பாதித்த ஏதேனும் கம்பனி அல்லது தனிநபர்களது இலாபத்தில் 25சதவீதம் விசேட ஆதாயம் வரி (Super Gains Tax) செலுத்துவதற்கு கடப்பாடுடையவராவார். 

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சரினால் மேலும் ஆறு இதர வரி மூலங்களும் மற்றும் நிதிச் சட்டத் திருத்தங்களும் தாக்கல் செய்யப்பட்டன. 

அவையாவன மதுபானசாலைகள் மற்றும் தவறணைகள் அறவீடு (Bars and Taverns Levy), சீட்டாட்டத் தொழில் அறவீடு (Casino Industry Levy) , வீட்டுக்கு நேரடி செய்மதிச் சேவைகள் அறவீடு  (Direct-to-Home Satellite Services Levy), செய்மதி அமைவிட அறவீடு (Satellite Location Levy), மோட்டார் வாகன இறக்குமதியாளர் உரிமைக்கட்டணம்(Motor Vehicles Importer License Fee) , தொலைபேசி தொழிற்படுத்துநர் அறவீடு   (Mobile Telephone Operator Levy) மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட விளையாட்டு அலைவரிசை அறவீடு (Dedicated Sports Channel Levy). 

ரூ .1,000 மில்லியன் நேரடி-முகப்பு செயற்கைக்கோள் சேவைகள் தீர்வை இலங்கையில் 50,000 க்கும் அதிகமான சந்தாதாரர்கள் கொண்ட செயற்கைக்கோள் மூலம் நேரடி-முகப்பு சேவைகள் வழங்கும் தொழிலில் உள்ள ஒவ்வொரு நபர் மீதும் சுமத்தப்படும். 

குடியகல்வு வரி இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயரும் போது இலங்கையில் சம்பாதித்த அவர்களது சொத்துக்களை நிரந்தரமாக நாட்டை விட்டு செல்வதற்கு எண்ணுகின்ற பொழுது குடியகல்வில் நாட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்படுகின்ற அத்தகைய அனைத்து வெளிநாட்டு செலாவணிகளுக்கும் 20சதவீதம் வரி அறவிடப்படும். நிதிப்பற்றாக்குறை கொண்ட பொருளாதாரத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி முக்கியமானது. பாரிய கடன்கள் மற்றும் கடன் மீள் செலுத்துகைக்கான செலவுகள் நிதிப்பற்றாக்குறை மிக முக்கியமான காரணங்களாகும். 

வரி வருமானத்தால் மட்டுமல்லாது, வீணான அரச செலவை குறைப்பதன் மூலமும் நிதிப்பற்றாக்குறையை சீரமைக்கலாம். அவற்றை விட அரச நிறுவனங்களின் பங்கு விற்பனை, நலிவடைந்த அரச நிறுவனங்களை விற்பது, அரச நிலங்களை விற்பது போன்றவற்றால் வரியல்லா வருவாயைப் பெருக்க அரசு முயற்சி செய்ய வேண்டும். 

நிதிப்பற்றாக்குறை, நிர்ணயித்துள்ள இலக்கை காட்டிலும் அதிகரிக்கும் பட்சத்தில், சர்வதேசக் கடன் தகுதி தர நிர்ணய நிறுவனங்கள் இலங்கையின் கடன் பெறும் தகுதியை குறைக்க வாய்ப்புள்ளது. சமீபத்திய தற்காலிக வரி திட்டங்களை விடுத்து குறிப்பிட்ட துறைகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது விரிவான வரி சீர்திருத்தங்களை வடிவமைப்பு செய்து பதிலீடு செய்ய வேண்டும்.வரி விலக்குகள், வரி தவிர்த்தல், வரி ஏய்ப்பு நீக்குவதற்கு அல்லது குறைக்க கொள்கைகளை செயல்படுத்த வேண்டும். 

Source: Click here to view
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2015/10/blog-post.html"

Wednesday, 7 January 2015

இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல் 2015

submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2015/01/2015_7.html"

Tuesday, 2 September 2014

இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 02.09.2014

இலங்கை பங்கு சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 0.09 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.09 சதவீதம் (6.07 புள்ளி) சரிந்து 7,024.82 புள்ளியிலும், S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டி (S&P Sri Lanka 20 Index - S&P SL20) 0.07 சதவீதம் (2.89 புள்ளி) 
சரிந்து  3,874.50 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 1,088.55 மில்லியன் ரூபாய்.

செவ்வாய்க்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 21.27 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 77.92 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 56.65 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.


இன்றைய சந்தை நடவடிக்கையின் முடிவில் விலை அதிகரிப்பை வெளிப்படுத்திய கம்பனிகள் 81 ஆகவும் , விலை சரிவை வெளிப்படுத்திய கம்பனிகள் 114 ஆகவும் காணப்பட்டன.


அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 02.09.2014





S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 02.09.2014


இன்று மொத்தமாக 9,274  பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 9,031 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 243 ஆகவும் பதிவாகியிருந்தன.

இன்று கைமாறிய மொத்த பங்குகளின் எண்ணிக்கை 35,387,181 ஆகவும், இதில் கைமாறிய உள்நாட்டு பங்குகளின் எண்ணிக்கை 31,354,751 ஆகவும் கைமாறிய வெளிநாட்டு பங்குகளின் எண்ணிக்கை 1,812,358 ஆகவும் பதிவாகியிருந்தன.
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2014/09/02092014.html"